கல்வராயன் மக்களின் பொருளாதார நிலை; ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணை
கல்வராயன் மக்களின் பொருளாதார நிலை; ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணை
ADDED : ஜூலை 02, 2024 02:31 AM
சென்னை : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி சம்பவத்தின் எதிரொலியாக, கல்வராயன் மலை பகுதி மக்களின் சமூக, பொருளாதாரத்தை மேம்படுத்த, உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், கள்ளச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்தச் சம்பவம் குறித்த செய்தி வெளியான போது, கல்வராயன் மலை பகுதியிலும் கள்ளச்சாராயம் தயாரிப்பதாக செய்திகள் வந்தன.
ஒளிபரப்பு
கல்வராயன் மலையில் வசிக்கும் மக்களின், சமூக, பொருளாதார நிலை குறித்து, மூத்த வழக்கறிஞர் கே.ஆர்.தமிழ்மணி அளித்த பேட்டி, 'டிவி' சேனல்களில் ஒளிபரப்பானது.
இதையடுத்து, இந்தப் பிரச்னை தொடர்பாக, உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வு, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
வழக்கில், மாநில அரசின் தலைமை செயலர், மத்திய அரசின் பழங்குடியின விவகாரத்துறை அமைச்சகம், மாநில ஆதிதிராவிட, பழங்குடியின நலத்துறை முதன்மை செயலர், டி.ஜி.பி., கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி., சேலம் கலெக்டர் மற்றும் எஸ்.பி., ஆகியோரை பிரதிவாதிகளாக நீதிபதிகள் சேர்த்தனர்.
இவ்வழக்கில், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவத்தை தொடர்ந்து, கல்வராயன் மலைப்பகுதியிலும் சட்டவிரோதமாக சாராயம் தயாரிப்பதாக செய்திகள் வந்தன. கல்வராயன் மலை மற்றும் அதைச் சுற்றி சிறிய கிராமங்கள் உள்ளன.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த மக்களே வசிக்கின்றனர். இங்கு, அடிப்படை வசதிகள் இல்லை. பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கிய பகுதியாக உள்ளது.
இங்கு வசிக்கும் மக்கள், தங்கள் வாழ்வாதாரத்துக்காக கள்ளச்சாராயம் தயாரிக்கும் தொழிலுக்கு தள்ளப்படுகின்றனர். எனவே, கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் உள்ள இந்தப் பகுதிக்கு, சமூக, பொருளாதார கவனம் உடனடியாக தேவைப்படுகிறது. கல்வராயன் மலைப்பகுதி, 1976ல் தான் இந்தியா உடன் இணைந்தது. அதுவரை, இந்தியாவின் ஒரு பகுதியாக அது இல்லை.
தீய சக்திகள்
கல்வராயன் மலைப்பகுதியில் வசிப்பவர்களுக்கு அடிப்படை வசதிகள், நலத்திட்டங்கள் அளிக்கப்பட வேண்டும். தற்போதைய நிலையில், அது உடனடியாக தேவைப்படுகிறது.
மேற்கொண்டு குற்றச்சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, பொருளாதார நிலையை மேம்படுத்த, அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
மக்களின் பொருளாதார கஷ்டங்களை, தீயசக்திகள் சாதகமாக்கி, அவர்களை கள்ளச்சாராய தொழிலில் தள்ளுவதற்கான இடத்தை அளிக்கக் கூடாது.
எனவே, இந்தப் பிரச்னையை உடனடியாக அணுகி, அந்தப் பகுதி மக்களின் பொருளாதார, சமூக மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.