ADDED : ஜூன் 09, 2024 01:33 AM
சென்னை: மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையம் அமைக்க, தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டும் நிலையில், துணைமின் நிலையங்களின் வளாகத்தில், அதிக வாய்ப்பிருந்தும் அதை அமைக்க மின் வாரியம் தயக்கம் காட்டி வருகின்றது.
தமிழகம் உட்பட நாடு முழுதும் பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக, மின்சாரத்தில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த வாகனங்களை தடையின்றி சார்ஜிங் செய்ய, தேசிய நெடுஞ்சாலையில் ஒவ்வொரு, 25 கி.மீ., துாரத்திற்கும் ஒன்று; மாநகரங்களில் ஒவ்வொரு 3 கி.மீ., துாரத்திற்கும் ஒன்று என, சார்ஜிங் மையங்களை அமைக்குமாறு, மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக மின்வாரியம், முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள, 100 துணைமின் நிலைய வளாகங்களில் சார்ஜிங் மையம் அமைக்க, 2022ல் திட்டமிட்டது. இதற்கான இடங்களை அடையாளும் காணும் பணி முடிந்து விட்டது. தற்போது, வாகன தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள், சார்ஜிங் மையங்களை அமைத்து வருகின்றன.
எனவே, நிதி நெருக்கடி உள்ள சூழலில், சார்ஜிங் மையத்தை தற்போதைக்கு அமைக்கலாமா அல்லது ஒத்திப் போடலமா என்று மின்வாரியம் தயக்கம் காட்டி வருகிறது.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சார்ஜிங் மையம் அமைக்க வேண்டிய துணைமின் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. விரைவில் அந்த மையங்கள் அமைக்கப்படும்' என்றார்.
அதேநேரத்தில், 'டெடா' எனப்படும், தமிழக அரசின் எரிசக்தி மேம்பாட்டு முகமை, சென்னை தலைமை செயலக வளாகத்தில், 100 கிலோ வாட் திறனில் சூரியசக்தி மின்சாரத்தில் இயங்கும் சார்ஜிங் மையம் அமைக்க இருப்பது குறித்து, 2023ல் அறிவிக்கப்பட்டது. இதுவும் இன்னும் அமைக்கப்படவில்லை.

