ADDED : ஏப் 29, 2024 06:15 AM
சென்னை : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், குறிப்பிட்ட சில கிராமங்களில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் திணறிவருகின்றனர்.
தமிழகத்தில் இலையுதிர் காலம் முடிந்து, கோடை துவங்கும் சமயத்தில், வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படுவது வழக்கம். இதை தடுப்பதற்கு புலிகள், யானைகள் காப்பகங்களில் திட்டமிட்ட அணுகுமுறை அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இந்த வனப்பகுதிகளில் குறுக்கிடும் சாலைகளை ஒட்டிய பகுதிகளில் புதர்கள் அகற்றப்பட்டு காட்டுத்தீ தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், காப்பகமாக பராமரிக்கப்படாத இடங்களில், இப்பணிகள் சாதாரண முறையில்தான் மேற்கொள்ளப்படுகின்றன.
குறிப்பாக, கிராமங்களை ஒட்டிய காப்புக்காடுகளில், காட்டுத்தீ தடுப்பு பணிகளில் அதிக கவனம் செலுத்தப்படுவது இல்லை. இப்பகுதிகளில், பெரும்பாலும் மனித தவறுகளால் தான் காட்டுத்தீ ஏற்படுவதாக புகார் கூறப்படுகிறது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னுாரை ஒட்டிய சில கிராமங்களில் கடந்த மாதம் காட்டுத்தீ ஏற்பட்டது. ஐந்து நாள் போராட்டத்துக்கு பின் தீ கட்டுப்படுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து தற்போது, கொடைக்கானலில் பிரதான நகரில் இருந்து, 35 கி.மீ., தொலைவில் உள்ள மன்னவனுார், பூம்பாறை, கிளாவரை போன்ற கிராமங்களில் சமீபத்தில் காட்டுத்தீ ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்த வனத்துறையினர் தீயை கட்டுப்படுத்தும் பணிகளை துவக்கினர். ஆனால், தொடர்ந்து நான்கு நாட்களாக தீ கட்டுக்குள் வராமல் உள்ளது.
இதுகுறித்து வனத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
கொடைக்கானலில், மன்னவனுார் உள்ளிட்ட கிராமங்களில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
உள்ளூர் களப்பணியாளர்களால் முடியாத நிலையில், வெளிமாவட்டங்களில் இருந்து பணியாளர்களையும், தீயணைப்பு துறையினரையும் வரவழைத்து பணியில் ஈடுபடுத்தி உள்ளோம்.
காட்டுத்தீ தானாக ஏற்பட்டதா அல்லது மனித தவறுகள் காரணமாக ஏற்பட்டதா என்பது குறித்தும் விசாரிக்கிறோம்.
இங்கு சில இடங்களில் நிலம் வாங்கி சுற்றுலா நோக்கில் மேம்படுத்த விரும்புவோர், புதர்களை தீ வைத்து அழிக்கும் பணிகளில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் யாராவது புதர்களை அழிக்க வைத்த தீ, பிற இடங்களுக்கு பரவியதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்.
இலையுதிர் காலம் முடிந்த நிலையில், கோடைக்காலம் உச்சத்தில் இருக்கும்போது காட்டுத்தீ ஏற்படுவது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

