கடலுார் குடிகாடில் 61 ஏக்கர் அலையாத்தி காடுகள்: புதிதாக உருவாக்குகிறது வனத்துறை
கடலுார் குடிகாடில் 61 ஏக்கர் அலையாத்தி காடுகள்: புதிதாக உருவாக்குகிறது வனத்துறை
UPDATED : ஜூன் 22, 2024 05:31 AM
ADDED : ஜூன் 22, 2024 01:32 AM

சென்னை: கடலுார் மாவட்டம், குடிகாடு பகுதியில், தமிழ்நாடு பசுமை இயக்க பணிகள் வாயிலாக, 61 ஏக்கர் பரப்பளவுக்கு அலையாத்தி காடுகள் உருவாக்கும் பணிகள் துவங்கி உள்ளதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடற்கரை ஓரங்களில், மணலும், நீரும் கலந்த சேறு போன்ற பகுதியில், குறிப்பிட்ட சில வகை மரங்கள் வளரும். இந்த மரங்கள் மணலில் வேர் பரப்பி, இறுகப் பிடிக்கும் தன்மை கொண்டவை. இதனால், இவ்வகை அலையாத்தி மரங்கள் இருக்கும் பகுதிகளில், கடல் அரிப்பு ஏற்படுவது தடுக்கப்படும்; சுனாமி போன்ற பேரிடர்கள் ஏற்படும் போதும் பாதிப்பு தடுக்கப்படும்.
அனுபவம்
மலைகள், சமவெளிப் பகுதிகளில் உள்ள வனங்களைக் காட்டிலும், கடலும், நிலமும் சேரும் இடத்தில் உருவாகும் அலையாத்திக் காடுகளில், படகு வாயிலாக வலம் வருவது அலாதியான அனுபவம்.
கடலுார் மாவட்டம் சிதம்பரம் அருகே பிச்சாவரம், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதிகளில் உள்ள அலையாத்திக் காடுகள் பிரபலமானவை. இதையடுத்து மேலும் பல இடங்களில், அலையாத்திக் காடுகளை உருவாக்க, வனத்துறை திட்டமிட்டுள்ளது.இதன்படி, கடலுார் மாவட்டம் குடிகாடு பகுதியில், 61 ஏக்கர் பரப்பில் அலையாத்திக் காடுகள் உருவாக்கும் பணிகளை, வனத்துறையினர் முடுக்கி விட்டுஉள்ளனர்.
இது தொடர்பான வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமை செயலர் சுப்ரியா சாஹு, சமூக வலைதளம் வாயிலாக வெளியிட்ட தகவல்: கடலுார் மாவட்டம் குடிகாடு பகுதியில், தமிழ்நாடு பசுமை இயக்கம் வாயிலாக, 61 ஏக்கர் பரப்பளவில் முறையாக திட்டமிடப்பட்ட முறையில், அலையாத்திக் காடுகள் உருவாக்கப்படுகின்றன.
![]() |
பேருதவி
இங்கு, சுரபுன்னை, வெண்கண்டல், கருங்கண்டல், நரிக்கண்டல், சிறுகண்டல், தில்லை, ஆட்டுமுள்ளி, உமிரி போன்ற வகை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, 37,000க்கு மேற்பட்ட மரக்கன்றுகள் இங்கு நடப்பட்டுள்ளன. இவை முறையாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.
அடுத்த சில ஆண்டுகளில், இப்பகுதி பிச்சாவரம் போன்று அடர்ந்த அலையாத்திக் காடாக மாறும். சூழலியல் ரீதியாக இது இப்பகுதி மேம்பாட்டுக்கு பேருதவியாக அமையும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


