பஸ் ஊழியர்களிடம் பிடித்த பணம் ரூ.15,000யை செலவழித்த அரசு
பஸ் ஊழியர்களிடம் பிடித்த பணம் ரூ.15,000யை செலவழித்த அரசு
ADDED : ஆக 20, 2024 04:20 AM

சென்னை: ஊழியர்களிடம் பிடித்தம் செய்த, 15,000 கோடி ரூபாயை நிர்வாகம் செலவிட்டதால், ஓய்வு பெறுவோருக்கு பணப்பலன் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் புகார் கூறியுள்ளது.
புதிய ஊதிய ஒப்பந்தம், பழைய ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில், சென்னை பல்லவன் இல்லம் முன் நேற்று வாயில் கூட்டம் நடந்தது.
சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., - எம்.எல்.எப்., - டி.டி.எஸ்.எப்., ஆகிய சங்கங்களின் கூட்டமைப்பு தொழிலாளர்கள் பங்கேற்றனர். பின், சி.ஐ.டி.யு., பொதுச்செயலர் ஆறுமுகநயினார் கூறியதாவது:
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, போக்குவரத்து துறையை சேவைத்துறை என்ற அடிப்படையில், அரசு நிதி வழங்க வலியுறுத்தி வருகிறோம். அரசு நிதி வழங்காததால், போக்குவரத்து கழகங்கள் நிதி நெருக்கடியில் உள்ளன.
தொழிலாளர்கள் பணம், 15,000 கோடி ரூபாயை எடுத்து செலவு செய்துள்ளனர். இதனால், ஊழியர்கள் ஓய்வு பெற்று, 20 மாதங்கள் கடந்த பின்னும், பணப்பலன் கிடைக்கவில்லை.
இது தவிர, பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர், துறைச்செயலர் ஆகியோரை சந்தித்து மனு அளித்துள்ளோம். அரசு எங்கள் கோரிக்கை மீது பேச்சு நடத்தி, பிரச்னைகளை தீர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.