அனுமதியின்றி திருவிழா அழைப்பிதழ்அச்சிட்டவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு
அனுமதியின்றி திருவிழா அழைப்பிதழ்அச்சிட்டவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : மே 11, 2024 06:08 AM
மதுரை: திருச்சியில் கோயில் திருவிழா நடத்த அதன் நிர்வாகங்களிடையே ஆலோசனை நடத்தாமல் அழைப்பிதழ் அச்சிட்ட மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருச்சி வைரவேல் தாக்கல் செய்த மனு: திருச்சியில் குறிப்பிட்ட இரு கடவுள்களுக்கு தேர் திருவிழா நடத்த தில்லைநகர் செங்குலாதன் குழந்தை அம்மன் கோயில் செயல் அலுவலர் நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறை இணைக் கமிஷனருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி பி.வேல்முருகன்: அனந்தபுரத்திலுள்ள பட்டத்து மாரியம்மன் கோயில் செங்குலாதன் குழந்தை அம்மன் கோயில் செயல் அலுவலர் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
நித்யானந்தபுரத்திலுள்ள முத்துக்கண் மாரியம்மன் கோயில் சில தனி நபர்களுக்கு சொந்தமானது. செயல் அலுவலர் அல்லது தனியார் கோயில் அறங்காவலர்களிடம் ஆலோசனை செய்யாமல் மனுதாரர் அழைப்பிதழை அச்சிட்டுள்ளதாக இரு கோயில் நிர்வாகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு கோயில்களுக்கும் திருவிழா நடத்தப்படும் என அழைப்பிதழ் தயாரித்து, கற்பனையான காரணம் அடிப்படையில் இம்மனுவை மனுதாரர் தாக்கல் செய்துள்ளார். இது ஏற்புடையதல்ல. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இதை உயர்நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணையத்திற்கு செலுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.