உயர்கல்வி ஆலோசனை தரும் வழிகாட்டி நிகழ்ச்சி நாளை முதல் 3 நாட்கள் நடக்கிறது
உயர்கல்வி ஆலோசனை தரும் வழிகாட்டி நிகழ்ச்சி நாளை முதல் 3 நாட்கள் நடக்கிறது
ADDED : மார் 22, 2024 01:10 AM
சென்னை:பிளஸ் 2 மாணவர்களுக்கு, உயர்கல்வி ஆலோசனை தரும், தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி, நாளை முதல் மூன்று நாட்கள் சென்னையில் நடக்கிறது.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், அடுத்து உயர்கல்வியில் சேருவதற்கான ஆலோசனை தர, 'தினமலர்' சார்பில், வழிகாட்டி நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடத்தப்படும். இந்த ஆண்டு, தினமலர் மற்றும் கோயம்புத்துார் ஸ்ரீகிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன்ஸ் நிறுவனம் இணைந்து, வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்துகின்றன.
சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில், நாளை துவங்கும் வழிகாட்டி நிகழ்ச்சி, 25ம் தேதி நிறைவு பெறுகிறது. காலை, 10:00 முதல் மாலை 6:30 மணி வரை, உயர்கல்வி கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடக்கும். 20க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், உயர்கல்வி கருத்தரங்கில், மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.
ஆலோசனை
நீட், ஜே.இ.இ., தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவதுடன், அதில் சாதித்து உயர்கல்வியை எட்டுவது குறித்து, கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன் ஆலோசனை தர உள்ளார். கலை, அறிவியல் படிப்புகள் குறித்து பேராசிரியர் திருமகன் பேச உள்ளார்.
டேட்டா அனலிடிக்ஸ் குறித்து, ஆஸ்பயர் சாமிநாதன், வருங்காலத்தை ஆளப்போகும் தொழில்நுட்பம் குறித்து கோப்ரூகல் நிறுவனத்தின் நிறுவனர் குமார் வேம்பு, அனைவருக்கும் ஐ.ஐ.டி., என்ற தலைப்பில், சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடியும் பேச உள்ளனர்.
நீங்களும் சாதனையாளர் ஆகலாம் என்ற தலைப்பில், இப்போபே நிறுவனத்தின் நிறுவனர் மோகன், வேலைவாய்ப்பு திறன்கள் குறித்து, ஸோஹோ நிறுவனத்தின் மனிதவள பிரிவு தலைவர் சார்லஸ் காட்வின், நீங்களும் விஞ்ஞானி ஆகலாம் என்ற தலைப்பில், இந்திய பாதுகாப்புத்துறை விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு பேச உள்ளனர்.
ஸ்பேஸ் சயின்ஸ் குறித்து, இஸ்ரோ இயக்குனர் ராஜராஜன், 21ம் நுாற்றாண்டு திறன்கள் குறித்து, சுஜித்குமார், எலக்ட்ரிக் வாகனங்கள் குறித்து செந்தில் ராஜா, வேலைவாய்ப்பு தரும் படிப்புகள் குறித்து, ரமேஷ் பிரபா மற்றும் மற்றும் கரியர் கவுன்சிலிங் குறித்து, கல்வி ஆலோசகர் அஸ்வின் ஆகியோர் விளக்கம் தருகின்றனர்.
கோவை ஸ்ரீராமகிருஷ்ணா எஜூகஷனல் இன்ஸ்டிடியூஷன்ஸ், அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் ஆகியன, பவர்டுபை நிறுவனங்களாக செயல்படும்.
ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பிரின்ஸ் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன்ஸ், வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், டெக்னாலஜி மற்றும் நியூ பிரின்ஸ் ஸ்ரீபவானி காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி மற்றும் ஷிவ் நாடார் பல்கலை ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன.

