முதியோர், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டளிப்பது துவக்கம்
முதியோர், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டளிப்பது துவக்கம்
ADDED : ஏப் 05, 2024 02:29 AM

சென்னை: தமிழகத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், லோக்சபா தேர்தலில் தபால் ஓட்டளிக்கும் பணி நேற்று துவங்கியது.
தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதிகளுக்கு, வரும் 19ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. மாநிலம் முழுதும் உள்ள வாக்காளர்களில் 6.08 லட்சம் பேர், 85 வயதுக்கு மேற்பட்டவர்கள். அவர்கள் விரும்பினால் வீட்டிலிருந்தே ஓட்டளிக்கலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.
அதன்படி தபால் ஓட்டளிக்க விரும்பிய, 4.30 லட்சம் பேருக்கு, 12டி விண்ணப்பம் வழங்கப்பட்டது. அதை, 77,445 பேர் பூர்த்தி செய்து வழங்கினர். மற்றவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தரவில்லை.
அதேபோல மாற்றுத் திறனாளிகள் 4.62 லட்சம் பேரில், தபால் ஓட்டளிக்க விருப்பம் தெரிவித்த, 3.65 லட்சம் பேருக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.
அவர்களில், 50,676 பேர் மட்டுமே தபால் ஓட்டளிக்க விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கினர். இதையடுத்து, 77,445 முதியோர்; 50,676 மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு, அவர்களின் வீட்டுக்கே சென்று, தபால் ஓட்டு வழங்கி, அதில் அவர்கள் ஓட்டை பதிவு செய்து, ஓட்டுப் பெட்டியில் பெறும் பணி நேற்று துவங்கியது.
ஈரோடு, கோவை, திருச்சி மாவட்டங்களில், இப்பணி நேற்று துவங்கியது. மற்ற மாவட்டங்களில் இன்று துவக்கப்பட உள்ளது. ஓட்டுச்சாவடி அலுவலர், போலீசார், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு, தபால் ஓட்டளிக்க விண்ணப்பம் அளித்தவர்களின் வீடுகளுக்கு சென்று தபால் ஓட்டை பெறுவர்.
வீட்டிற்கு செல்லும் போது, அவர்கள் இல்லாவிட்டால், இரண்டாவது முறை செல்வர். அப்போதும் இல்லையென்றால், அதன்பின் அலுவலர்கள் செல்ல மாட்டார்கள். அவர்கள் ஓட்டுச்சாவடிக்கும் சென்று ஓட்டளிக்க முடியாது.
அதேநேரம் விண்ணப்பம் பெற்று, அதை பூர்த்தி செய்து வழங்காதவர்கள், ஓட்டுச் சாவடிக்கு சென்று ஓட்டளிக்கலாம். தபால் ஓட்டு பெறும் பணி, வரும் 18 ம் தேதி வரை நடக்கும். இத்தகவலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

