ADDED : மார் 25, 2024 05:42 AM

உடுமலை: ஓட்டுப்பதிவுக்கான 'மை' வைக்கும் பணிக்கு, மாற்றுப்பணி வழங்க வேண்டும் என, கல்லுாரி பேராசிரியர்கள் தேர்தல் பிரிவு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு, ஏப்., 19ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, ஓட்டுச்சாவடியில் பணி செய்ய உள்ள தேர்தல் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு, அனைத்து பகுதிகளிலும் நேற்று நடந்தது.
உடுமலையில் இரு இடங்களில் இப்பயிற்சி வகுப்பு நடந்தது. இதில், துவக்கம் முதல், மேல்நிலை வரை உள்ள ஆசிரியர்கள், கல்லுாரி பேராசிரியர்களுக்கான தேர்தல் பணிக்கான நியமன உத்தரவும் வழங்கப்பட்டது.
இதில், பல முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், கல்லுாரி பேராசிரியர்களுக்கு ஓட்டுப்பதிவு அலுவலர் இரண்டு, மூன்று நிலை பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன்படி, ஓட்டுச்சாவடியில் வாக்காளர்களுக்கு, மை வைத்தல் மற்றும் கன்ட்ரோல் யூனிட் ஆன் செய்வது உள்ளிட்ட பணிகளை பேராசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.
இதனால், பேராசிரியர்களும், முதுநிலை ஆசிரியர்களும் அதிருப்தியடைந்தனர். பணிகளை மாற்றி வழங்கவும், தேர்தல் பிரிவு அதிகாரிகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

