சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி
சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி
ADDED : மே 16, 2024 06:49 PM

திருச்சி: பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கரை, ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கலாம், என்று திருச்சி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பெண் போலீசாரை அவதூறாக பேசிய தொடர்பான டி.எஸ்.பி., யாஸ்மின் உள்ளிட்ட போலீசாரின் புகார்படி, திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீசார், சவுக்கு சங்கர் மீது 5 சட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்தனர்.
அந்த வழக்கு விசாரணைக்காக, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையில் இருந்து நேற்று திருச்சி மகிளா உரிமையியல் நீதிமன்றத்திற்கு சவுக்கு சங்கர் அழைத்து வரப்பட்டு, நீதிபதி ஜெயப்பிரதா முன்னிலையில் ஆஜர்படுத்த பட்டார்.
கோவையில் இருந்து அழைத்து வந்த போது, பெண் போலீசார், வேனில் வைத்து அடித்து மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ எடுத்ததாக, நீதிபதி முன்னிலையில் புகார் தெரிவித்தார். அதனை, வேனில் பாதுகாப்புக்கு வந்த போலீசார் மறுத்தனர். அதே சமயம், சவுக்கு சங்கரை ஒரு வாரம் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்தனர்.
ஒரு குற்ற வழக்கிற்கு, இரண்டு, மூன்று முறை கஸ்டடிக்கு எடுக்க அனுமதிக்கக் கூடாது என சவுக்கு சங்கர் வழக்கறிஞர் கென்னடி வாதாடினார்.அதனால், திருச்சி அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுத்து, காயம் உள்ளதா என்பதை மருத்துவர்கள் பரிசோதிக்குமாறும், இன்று ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.அதன் பின், லால்குடி கிளை சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர், இன்று மதியம் 12:30 மணியளவில் மீண்டும் திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபட்டார்.
இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மதிய உணவு இடைவேளைக்கு பின், போலீஸ் காவல் தொடர்பான மனு மீது விசாரணை நடத்தினார்.சவுக்கு சங்கரை, ஒரு நாள் (24 மணி நேரம்) போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கலாம், என்று அனுமதி அளித்த நீதிபதி, நாளை மாலை 4 மணிக்கு சவுக்கு சங்கரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். மருத்துவ பரிசோதனை செய்து, போலீஸ் காவல் விசாரணையை துவக்க வேண்டும். நாளை மாலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும் முன், மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்து ஆஜர்ப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார். அந்த 24 மணி நேரத்தில், சவுக்கு சங்கரை, அவரது வழக்கறிஞர்களில் ஒருவர் மூன்று முறை சந்திக்கலாம், என்பதையும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.