வேன் டிரைவர் இறந்த வழக்கில் வீடியோ பார்த்து நீதிபதி அதிர்ச்சி
வேன் டிரைவர் இறந்த வழக்கில் வீடியோ பார்த்து நீதிபதி அதிர்ச்சி
ADDED : மார் 23, 2024 06:02 AM

மதுரை: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வேன் டிரைவர் இறந்ததற்கு இழப்பீடு கோரிய வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது. சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பில் காண்பித்த வீடியோ பதிவுகளை பார்த்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிர்ச்சியாக உள்ளது என்றார்.
சங்கரன்கோவில் அருகே வடக்கு புதுார் மீனா தாக்கல் செய்த மனு: என் கணவர் முருகன் வேன் டிரைவர். எங்களுக்கு 3 குழந்தைகள். முருகன் மார்ச் 8 சிவராத்திரியையொட்டி கோயிலுக்கு செல்ல அச்சம்பட்டியை சேர்ந்த சில பெண்களை வேனில் ஏற்றினார்.
ராஜபாளையம் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் இருந்தது. முன்புறம் வந்த ஒரு ஆட்டோ மீது வேன் லேசாக மோதியது. சங்கரன்கோவில் டவுன் போலீசார் 3 பேர் விசாரித்தனர். வண்டியை விட்டு கீழே இறங்கமாட்டாயா எனக்கூறி கணவரை ஷூ அணிந்த கால்களால் மிதித்தனர். கணவர் மயமக்கமடைந்தார். வேனிலிருந்த பெண்கள் போலீசாருக்கு எதிராக குரல் எழுப்பினர்.
வேனை போலீசார் ஓட்டிச் சென்றனர். தனியார் மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர் கணவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். போலீஸ் காவலில் மரணமடைந்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது. மரணத்திற்கு காரணமான போலீசார் மீது கொலை வழக்கு பதிய வேண்டும். எங்களுக்கு இழப்பீடு, அரசுப் பணி, குழந்தைகளின் கல்விச் செலவிற்கான தொகையை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார்.
அரசு தரப்பு: சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போலீஸ் காவலில் மரணம் நிகழவில்லை. பொது இடத்தில் சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட போலீசார் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். முருகனின் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உள்ளது. பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையை மனுதாரருக்கு வழங்கியுள்ளோம். அறிக்கை குறித்து ஆட்சேபனை எழுப்பவில்லை. சி.பி.சி.ஐ.டி.,யின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் தேவை. இவ்வாறு தெரிவித்தது.
சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பில் காண்பித்த வீடியோ பதிவுகளை பார்த்த நீதிபதி அதிர்ச்சியாக உள்ளது என்றார். விசாரணையை மார்ச் 25க்கு ஒத்திவைத்தார்.

