மீனாட்சி அம்மன் கோவிலில் செங்கோல் நடைமுறையை மாற்ற கோரி வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி
மீனாட்சி அம்மன் கோவிலில் செங்கோல் நடைமுறையை மாற்ற கோரி வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி
ADDED : ஏப் 16, 2024 10:30 PM
மதுரை:மதுரையில் சித்திரைத் திருவிழாவையொட்டி, மீனாட்சி அம்மன் கோவில் பட்டாபிஷேகத்தின் போது, செங்கோலை அறங்காவலர் குழு தலைவரிடம் ஒப்படைப்பதற்கு பதிலாக, பழங்கால நடைமுறைகளை பின்பற்ற உத்தரவிட தாக்கலான வழக்கை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
மதுரை கோச்சடையைச் சேர்ந்த தினகரன் என்பவர் தாக்கல் செய்த மனு:
மதுரையில் சித்திரைத் திருவிழாவையொட்டி, மீனாட்சி அம்மன் கோவிலில் ஏப்., 19ல் பட்டாபிஷேகம் நடைபெறும்.
இக்கோவிலில் சைவ காமிகா, காரணா ஆகமங்களின்படி திருவிழா, பூஜைகள், இதர நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
பாண்டிய மன்னன் கையில் இருந்த செங்கோல் பட்டாபிஷேக நாளில் மீனாட்சி அம்மனிடம் ஒப்படைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இதை குறிக்கும் வகையில் ஆகமங்களின்படி அர்ச்சகர்களால் மதுரையை ஆட்சி செய்த மன்னர்களிடம் 'செங்கோல்' ஒப்படைக்கப்பட்டது.
ஆகம நடைமுறை
கடந்த 1939ல் கோவில் அறங்காவலர் குழு தலைவரிடம் செங்கோல் ஒப்படைக்கப்பட்டது. திருமணமாகாதவர் அல்லது வாழ்க்கைத்துணை இல்லாமல் அறங்காவலர் குழு தலைவர் இருக்கும்பட்சத்தில் செங்கோலை பெற அவருக்கு ஆகம நடைமுறைகள்படி தகுதி இல்லை.
தற்போது கோவில் அறங்காவலர் குழு தலைவராக ருக்மணி உள்ளார். இவரது கணவர் பழனிவேல்ராஜன், தமிழக அமைச்சராக பதவி வகித்தபோது, இறந்துவிட்டார்.
ஆகமங்கள் மற்றும் பாரம்பரிய மத நடைமுறைகளின்படி செங்கோலை பெறுவதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை. கோவில் செயல் அலுவலர் திருமணமாகாதவர். அவருக்கும் செங்கோலை பெறத் தகுதி இல்லை.
வழக்கமான நடைமுறையின்படி செங்கோலை அனந்தகுல சதாசிவ பட்டர் குடும்பத்தின் மூத்த உறுப்பினரிடம் ஒப்படைக்க வேண்டும். அக்குடும்பத்தில் தகுதியான நபர்கள் இல்லையெனில் செங்கோலை சுவாமி சிலையின் அருகில் வைக்க வேண்டும்.
இதை வலியுறுத்தி அறநிலையத்துறை கமிஷனர், மீனாட்சி அம்மன் கோவில் இணை கமிஷனருக்கு மனு அனுப்பினேன்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
அவசர வழக்காக நீதிபதி சி.சரவணன் விசாரித்தார்.
அரசு தரப்பில், 'செங்கோல் பெறுவது மத நடவடிக்கை அல்ல. வாழ்க்கைத் துணையை இழந்தவர் என்பதால் செங்கோலை பெறுவதற்கு ஆகமங்களின்படி எவ்வித தடையும் இல்லை. மனுதாரர் தரப்பு கூறுவது ஏற்புடையதல்ல' என தெரிவிக்கப்பட்டது.
தடையில்லை
நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இம்மனு ஏற்புடையதல்ல. அறங்காவலர் குழு தலைவர் செங்கோல் பெறுவதற்கு தடை விதிக்க முடியாது.
மனுதாரர் அறநிலையத்துறை சட்டப்படி அதன் இணை கமிஷனரிடம் மனு அளிக்கலாம். அதை அவர் அடுத்த 2025 திருவிழாவிற்குள் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டார்.

