அட்டையை காட்டி 'ஆட்டை' வீட்டுவாரிய நிலங்களை அபகரிக்கும் 'மாஜி'க்கள்
அட்டையை காட்டி 'ஆட்டை' வீட்டுவாரிய நிலங்களை அபகரிக்கும் 'மாஜி'க்கள்
ADDED : ஆக 23, 2024 02:27 AM
சென்னை:போலி ஆவணங்கள் வாயிலாக, முன்னாள் அதிகாரிகள் துணையுடன், வீட்டுவசதி வாரிய நிலங்கள் அபகரிக்கப்படுவது குறித்த விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
வீட்டுவசதி வாரியம் சார்பில் குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதற்காக தேர்வு செய்யப்பட்ட நிலங்களில், சில இடங்களில் குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் இருக்கும்.
வீட்டு மனைகள் விற்பனை திட்டத்தில், சில இடங்களில் மனைகள் யாருக்கும் ஒதுக்கப்படாமல் இருக்கும். இது போன்ற நிலங்களை குறிவைத்து, அபகரிப்பு முயற்சியில் உள்ளூர் நபர்கள் ஈடுபடுகின்றனர்.
பொதுவாக வீட்டுவசதி வாரிய நிலங்களை, தனியார் பெயருக்கு பத்திரப்பதிவு செய்யும் போது, அதற்கான அதிகாரி நேரில் வந்து கையெழுத்திட்டால் போதும்; அத்துடன் அலுவலக முத்திரையும் இருக்க வேண்டும்.
இதற்கு அப்பால், அந்த நிலம் தொடர்பான முந்தைய ஆவணங்கள், வாரிய நிர்வாகக் குழு ஒப்புதல் கடிதம், பட்டா போன்ற விபரங்களை, சார் - பதிவாளர்கள் ஆய்வு செய்வதில்லை. இதை பயன்படுத்தி, வாரிய நிலங்கள் அபகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
சென்னை மற்றும் கோவையில் வாரிய நிலங்கள் அபகரிப்பில், உள்ளூர் அரசியல் புள்ளிகளுடன் சேர்ந்து, முன்னாள், இன்னாள் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துஉள்ளன.
இது குறித்து, வீட்டுவசதி வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னையில் கே.கே.நகர் கோட்டம், கோவை உள்ளிட்ட பகுதிகளில் வாரிய நிலங்கள் அபகரிக்கப்பட்ட விவகாரம், சில ஆண்டுகளுக்கு முன் தெரிய வந்தது.
இதில், போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. சில அலுவலர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.இந்நிலையில், தற்போது பல்வேறு இடங்களில்வாரியத்தின் பெயரை பயன்படுத்தி, சிலர் நில அபகரிப்பில் ஈடுபடுவதாக புகார்கள் வந்துள்ளன. குறிப்பாக, வாரியத்தில் இருந்து ஓய்வு பெற்ற சில நபர்கள், தங்களிடம் இருக்கும் பழைய ஆவணங்களை தவறாக பயன்படுத்தி, நில விற்பனையில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.
தாங்கள் பணியில் இருந்த போது, கையாண்ட கோப்புகளில் யாருக்கும் ஒதுக்கப்படாமல் இருந்த மனைகள் குறித்த கடிதங்கள், வரைபடங்கள் போன்ற விபரங்களை, இவர்கள் பிரதி எடுத்து சென்றுள்ளனர்.
இதை பயன்படுத்தி, யாருக்கும் சந்தேகம் வராத வகையில், மனை வாங்கும் நபர்களுடன் பேசி, சார் - பதிவாளர் அலுவலகம் சென்று பதிவு செய்து கொடுத்துள்ளனர். தங்களது பழைய அடையாள அட்டை, அலுவலக முத்திரை போன்றவற்றை தவறாக பயன்படுத்தி உள்ளனர். வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் என்று கூறிக்கொள்வதால், இவர்கள் குறித்த உண்மை தன்மையை சார் - பதிவாளர்கள் முழுமையாக ஆய்வு செய்வதில்லை.
இது குறித்து விசாரணை நடத்தி, விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.