அமைச்சருக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலகல
அமைச்சருக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலகல
ADDED : மார் 23, 2024 02:12 AM

பொள்ளாச்சி:'தேர்தலில் ஓட்டு குறைவாக வாங்கி கொடுத்தால் முதல்வர் நடவடிக்கை எடுப்பார்,' என அமைச்சர் சக்கரபாணி பேசியதற்கு, மேடையிலேயே அமைச்சர் முத்துசாமி பதிலடி கொடுத்ததால் கட்சியினர் உற்சாகமடைந்தனர்.
பொள்ளாச்சி லோக்சபா தி.மு.க., வேட்பாளராக ஈஸ்வரசாமி அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம், பொள்ளாச்சி லாரி உரிமையாளர்கள் சங்க மண்டபத்தில் நடந்தது.
அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:
தி.மு.க., ஆட்சிப்பொறுப்பு ஏற்றதும், முதல்வர் சொன்னது மட்டுமின்றி, சொல்லாததையும் செய்து சாதனைகள் படைத்து வருகிறார்.
தேர்தலுக்கான பணிகள் கடந்த, ஓராண்டாக மேற்கொண்டு வருகிறோம். நாம் அனைவரும் இணைந்து நல்ல முறையில் பாடுபட வேண்டும்.
'ஓட்டு எங்கு குறைகிறதோ, அவர்கள் மீது நடவடிக்கை பாயும்; யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்; தொடர்ந்து, 10 மணி நேரம் உழைக்க வேண்டும்' என, முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
அதை மனதில் நிலை நிறுத்தி கட்சிப்பணியாற்றிட வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மறந்து உழைத்து வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
அமைச்சர் முத்துசாமி பேசியதாவது:
அமைச்சர் சக்கரபாணி, யாராவது சரியாக பணியாற்றவில்லை என்றால், நடவடிக்கை பாயும் என முதல்வர் சொன்தை தெரிவித்தார். நான் சக்கரபாணிக்கு சொல்லிக் கொள்கிறேன். பொள்ளாச்சி கட்சியினரை பொறுத்தவரை எந்த இலக்கை தருகிறோமோ, அதை விட பத்து மடங்கு செய்து விடுவர்.
பொள்ளாச்சிக்கு முதல்வர் வந்து சென்ற நாளில் இருந்தே, தேர்தல் பணிகள் துவங்கி விட்டன. கட்சியின் வெற்றி முடிவான ஒன்று. தற்போது, மாநாடு, கூட்டம் நடத்துவதை விட, வீடு, வீடாக சென்று அரசின் சாதனைகளை கூறி மக்களிடம் ஓட்டு சேகரிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
அமைச்சர் சக்கரபாணிக்கு பதிலடி தரும் வகையில், அமைச்சர் முத்துசுாமி பேசியதும் கட்சியினர் கைதட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தினர். அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

