இண்டியா கூட்டணியின் நோக்கம் நிறைவேறவில்லை; சிதம்பரம் வேதனை
இண்டியா கூட்டணியின் நோக்கம் நிறைவேறவில்லை; சிதம்பரம் வேதனை
ADDED : ஜூலை 08, 2024 06:31 AM

திருப்புத்தூர் : எம்.பி., தேர்தல் முடிவால் இண்டியா கூட்டணி நோக்கம் நிறைவேறவில்லை என திருப்புத்துாரில் முன்னாள் அமைச்சர் சிதம்பரம் வேதனை தெரிவித்துள்ளார்.
நன்றி கூட்டத்தில் அவர் பேசியதாவது: நடந்து முடிந்த தேர்தலில் இண்டியா கூட்டணிக்கு முஸ்லிம்கள் அதிக ஆதரவு அளித்துள்ளனர்.
அவ்வப்போது சில தடை, குறுக்கீடு, சறுக்கல் இருப்பினும், 75 ஆண்டு சுதந்திர நாடாக நடைபோட்ட இந்தியா, சர்வாதிகார பாதைக்குபோய்விடுமோ என்ற அச்சம் எங்களிடம் ஏற்பட்டது.
இந்தியா ஒரு மனிதன் மட்டுமே ஆளும் நாடாக மாறிவிடும் என பயந்தோம். பா.ஜ.,விற்கு 400 இடங்கள் கிடைத்திருந்தால், அந்தநிலை ஏற்பட்டிருக்கும். இண்டியா கூட்டணிக்கு கூடுதலாக 25 எம்.பி.,க்கள் கிடைத்திருந்தால், ஆட்சி அமைத்திருக்கலாம்.
அரசியல் சாசனத்தை திருத்தும் எண்ணம் பா.ஜ.,விற்கு இருந்தால் அதை நிறைவேற்ற விடமாட்டோம். ஒரு நாடு, ஒரு தேர்தல், பொது சிவில் சட்டம் நிறைவேற்ற விடமாட்டோம். குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றிவிட்டனர். இந்த விஷயம் நீதிமன்றத்தில் உள்ளது. இவ்வாறு பேசினார்.