வரி பாக்கி வசூலிக்காததால் பணம் பிடித்தம் ஓய்வு பெறும் ஆணையை பெறாத அதிகாரி
வரி பாக்கி வசூலிக்காததால் பணம் பிடித்தம் ஓய்வு பெறும் ஆணையை பெறாத அதிகாரி
ADDED : ஆக 02, 2024 01:04 AM
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சியில் வரி பாக்கி வசூல் செய்யாததால் ஓய்வு பெறும் நாளில் சேர வேண்டிய பணத்தை பிடித்தம் செய்ததால் வருவாய் ஆய்வாளர் பிரிவு உபசார விழாவை புறக்கணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் நகராட்சியில் வருவாய் ஆய்வாளராக சரஸ்வதி கடந்த 22 மாதங்களாக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் அவர் பணி ஓய்வு பெற்றார்.
அப்போது, பணிக்காலத்தில் வரி பாக்கியை வசூலிக்காமல், நிலுவை வைத்துள்ளதால், அவருக்கு சேர வேண்டிய பணத்தில் 4 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பிடித்தம் செய்யப்படும் எனவும், நிலுவை வரி பாக்கியை புதிய வருவாய் ஆய்வாளர் வசூலித்ததும், தங்களிடம் பிடித்தம் செய்த பணத்தை திரும்ப வழங்குவதாக அதிகாரிகள் கூறினர்.
அதிர்ச்சியடைந்த சரஸ்வதி ஓய்வு பெறும் ஆணையை பெறாததோடு, நகராட்சியில் ஏற்பாடு செய்திருந்த பிரிவு உபசார விழாவை புறக்கணித்துவிட்டு வீட்டிற்கு சென்றார்.
இதையடுத்து விழுப்புரத்தில் உள்ள சரஸ்வதி வீட்டின் கதவில், அவரது ஓய்வு பெறும் ஆணையை நகராட்சி ஊழியர்கள் ஒட்டினர்.
இதுகுறித்து சரஸ்வதி கூறுகையில், 'நான் வருவாய் ஆய்வாளராவதற்கு முன்பே இருந்த பாக்கியை, எனது பணத்தில் பிடித்தம் செய்கினர். எனக்கு ஓய்வூதியம் கிடையாது. எனக்கு சேர வேண்டிய பணம் வரும் வரை அபராத தொகை பிடித்தம் செய்ய வேண்டாம். அந்த பணம் வரும் போது வேண்டுமானால் பிடித்தம் செய்து கொள்ளுங்கள் என நான் கூறியதை கமிஷனர் ஏற்கவில்லை.
உடனடியாக எனக்கு கிடைக்கும் பணத்துடன் கூடிய விடுமுறை பணத்தில் பிடித்தம் செய்வதாக கூறியதால் மன உளைச்சலுடன் ஓய்வு பெற்றேன். 5 வார்டுகளுக்கு சர்க்கரை ஆலை நிர்வாகம் குடிநீர் வழங்குகிறது.
அதனால், அவர்கள் நகராட்சி குடிநீர் இணைப்பை துண்டித்து கொண்டனர். அதனை வரிபாக்கி கணக்கில் இருந்து நீக்குமாறு பல மாதங்களாக கூறினேன். அதை செய்திருந்தால், எனது பணத்தில் பிடித்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. அதிகாரிகள் தவறால் எனது பணத்தை பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது' என்றார்.