ADDED : ஏப் 20, 2024 10:45 PM
பள்ளிப்பாளையம்,:நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் விசைத்தறி முக்கிய தொழிலாக உள்ளது. இங்கு, 30,000க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் செயல்படுகின்றன. இங்கு, சட்டை, வேட்டி, லுங்கி, துண்டு உள்ளிட்ட துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. லுங்கி உற்பத்தி முக்கியமாக உள்ளது.
பள்ளிப்பாளையம் லுங்கிக்கு மக்களிடம் அதிக வரவேற்பு உள்ளதால் விற்பனையும் அதிகரித்து காணப்படும். பண்டிகை காலத்தில் ஆர்டர் அதிகளவு இருக்கும். அப்போது உற்பத்தியும், விற்பனையும் இரண்டு மடங்கு அதிகரித்து காணப்படும்.
லோக்சபா தேர்தல் நடந்ததால், உற்பத்தியின்றி தொழில் மந்தமாக காணப்பட்டது. நேற்று முன்தினம் தேர்தல் முடிந்ததையடுத்து, 'ஆர்டர்' அதிகளவு வரத் தொடங்கி உள்ளது.
இதுகுறித்து, நேரு நகரை சேர்ந்த லுங்கி உற்பத்தியாளர் சரவணன் கூறுகையில், ''ரம்ஜான் பண்டிகை ஆர்டர் முடிந்து, லோக்சபா தேர்தலால் லுங்கி உற்பத்தி மந்தமாக காணப்பட்டது. தேர்தல் முடிந்ததால், வழக்கமான ஆர்டர்கள் வரத்தொடங்கி உள்ளன. அதனால் உற்பத்தி தீவிரமடைந்து உள்ளது,'' என்றார்.

