வழிகாட்டியாக இருக்க வேண்டியவர் ஏதேதோ பேசுகிறார்: பன்னீர்செல்வத்தை விளாசிய பழனிசாமி
வழிகாட்டியாக இருக்க வேண்டியவர் ஏதேதோ பேசுகிறார்: பன்னீர்செல்வத்தை விளாசிய பழனிசாமி
ADDED : மார் 03, 2025 06:52 AM

தேனி : ''நாங்கள் மூழ்கும் கப்பல் அல்ல; கரை சேரும் கப்பல். இதில் ஏறுபவர்கள் பிழைப்பர். வழிகாட்டியாக இருக்க வேண்டியவர் ஏதேதோ பேசுகிறார்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசினார்.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் நடந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில், அவருக்கு பதிலடி தரும் வகையில் பழனிசாமி இவ்வாறு ஆவேசமாக பேசினார்.
எதிரி அல்ல
அவர் மேலும் பேசியதாவது:
பா.ஜ.,வை கண்டு நாங்கள் நடுங்கவில்லை. எதிர்க்கட்சியாக இருந்த போது கருப்பு பலுான், குடை பிடித்த ஸ்டாலின், ஆளுங்கட்சியாக மாறிய பின் வெள்ளை குடை பிடிக்கிறார். ஆளும் போது ஒன்று, எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒன்று என, தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறது.
தி.மு.க., அரசு அகற்றப்பட வேண்டும். வேறு யாரும், எந்த கட்சியும் எங்களுக்கு எதிரியல்ல. மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என, முதல்வர் கூறுகிறார். லோக்சபாவில் பேச பயம். தமிழகத்தில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்துவர். டில்லியில் அழுத்தம் கொடுத்து தேவையான நிதியை பெற ஸ்டாலினுக்கு திறமை இல்லை.
'நீட்' தேர்வு ரத்து செய்யப்படும் எனக்கூறி விட்டு, தற்போது நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என கூறுகின்றனர். ஒன்றும் செய்ய முடியாது என்பது தான் நீட் ரகசியம்.
இந்த மாவட்டத்தில் இருப்பவர் என்னை மூழ்கும் கப்பல் என கூறியுள்ளார். பதவி கிடைக்கவில்லை என்றால் தர்மயுத்தம் செய்பவர். அ.தி.மு.க., ஆட்சிக்கு எதிராக தி.மு.க.,விற்கு துணை நின்றவர். இரட்டை இலை சின்னத்தை முடக்க கடிதம் வழங்கினார். கட்சி தலைமை அலுவலகத்தை அடித்து நொறுக்கினார். எவ்வளவோ கெஞ்சியும், நீங்கள் தான் சென்றீர்கள்.
எப்போதும் விஸ்வாசம் என்பவர், 1989 தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட வெண்ணிற ஆடை நிர்மலாவிற்கு ஆதரவாக செயல்பட்டார். அந்த தேர்தலில் சேவல் சின்னத்தில் நின்ற நான் எம்.எம்.ஏ., ஆனேன். அவருக்கு நான் சீனியர்.
கரை சேரும் கப்பல்
அதன் பின் எம்.பி., அமைச்சர் ஆனேன். பலமுறை உங்களுடன் நின்றோம்; பணிபுரிந்தோம். நீங்கள் யாரால் வந்தீர்கள் என தெரியும். நாங்கள் மூழ்கும் கப்பல் அல்ல; கரை சேரும் கப்பல். இதில் ஏறுபவர்கள் பிழைப்பர். வழிகாட்டியாக இருக்க வேண்டியவர் ஏதேதோ பேசுகிறார். 2026ல் அ.தி.மு.க., இருக்காது என்கிறார்.
தற்போது களை எடுக்கிறோம். இது 2026ல் விளைச்சலை கொடுக்கும். இந்த கட்சியில் யார் வேண்டுமானாலும் மேடைக்கு வர முடியும். பிற கட்சியில் யாரேனும் அப்படி சொல்ல முடியுமா? தி.மு.க.,வில் ஸ்டாலின், அவருக்கு பின் உதயநிதி, இன்பநிதி தான்.
இவ்வாறு அவர் பேசினார்.