ADDED : ஜூலை 04, 2024 04:03 AM

கோவை : கோவையில், சி.எஸ்.ஐ., மதபோதகர், ஹிந்துக்களின் மத உணர்வுகளைத் துாண்டும் வகையில் பேசியுள்ளதற்கு எதிராக பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் வலுத்துவருகின்றன. பெயரளவிற்கு வழக்குப்பதிவு செய்த போலீசார், சட்டப்படி கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல் கைகட்டி வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோவை, சி.எஸ்.ஐ., இமானுவேல் சர்ச்சில், கடந்த ஜூன் 16ல் நடந்த கூட்டத்தில், மதபோதகர் பிரின்ஸ் கால்வின் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ஹிந்துக்களின் மத உணர்வை துாண்டும் வகையில் அமைந்துள்ளதாக பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்பினர், தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் மதபோதகர் பிரின்ஸ் கால்வினை கைது செய்ய வலியுறுத்தி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனிலும் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கைது இல்லை
ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் மத நம்பிக்கைக்கு எதிராக, மத உணர்வுகளை துாண்டும் நோக்கத்துடனும், குரோதமான உட்கருத்துடன்; சமய, இன, மொழி தொடர்பாக சமூகத்தினர் இடையே பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் அவமதித்து பேசுதல்; பகை உணர்வும் வெறுப்பும் உண்டாக்கும் வகையில் பேசுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் ரேஸ்கோர்ஸ் போலீசார், மதபோதகர் பிரின்ஸ் கால்வின் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர்.
ஆனால், இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. 'பா.ஜ.,- இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டாலே மத உணர்வை துாண்டுவதாக கூறி உடனுக்குடன் கைது செய்யும் போலீசார், மதபோதகர் விஷயத்தில் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர்' என்ற குற்றச்சாட்டு இந்து அமைப்புகள் மத்தியில் எழுந்துள்ளது. சமூக நல்லிணக்கத்துக்கு கேடு விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் போலீசார் பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தல் பரவலாக எழுந்துள்ளது.
இதுகுறித்து இந்து அமைப்பினர் கூறுகையில், 'இந்துக்களை இழிவு படுத்தும் பாதிரியாரின் மத துவேஷ பேச்சை நேரடியாக முகநுாலில் ஒளிபரப்பியுள்ளனர்; அதற்கான ஆதாரங்களை சேகரிப்பது ஒன்றும் கடினமான காரியமல்ல. அவ்வாறிருந்தும் சாக்கு போக்கு சொல்லி, கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல் போலீசார் பதுங்குகின்றனர்.
இது, 'ஒரு பதிவுக்கு இன்னொரு பதிவு' என, பதிலடியான சம்பவங்கள் நிகழ வழி ஏற்படுத்திவிடும் அபாயம் உள்ளது. நாங்கள் போராட்டத்தில் இறங்கும் முன் போலீசார் விழித்துக்கொண்டால் நல்லது' என்றனர்.