ADDED : செப் 17, 2024 05:40 AM

சென்னை : தமிழகத்தில் மீண்டும் ஆபரண தங்கம் சவரன் விலை, 55,000 ரூபாயை தாண்டியது.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் உள்ளிட்ட சர்வதேச நிலவரங்களால், இந்தாண்டு துவக்கத்தில் இருந்து, உள்நாட்டில் தங்கம் விலை உயர்ந்து வந்தது. தமிழகத்தில் ஜூலை 17ல் எப்போதும் இல்லாத வகை யில், 22 காரட் ஆபரண தங்கம் சவரன் விலை, 55,360 ரூபாயாக அதிகரித்தது.
அதேமாதம் 23ம் தேதி, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தங்கம் மீதான இறக்குமதி வரி, 15 சதவீதத்தில் இருந்து, 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால், அந்த வாரத்தில் தங்கம் விலை, சவரனுக்கு 3,200 ரூபாய் வரை சரிந்தது. பின், தங்கம் விலையில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்பட்டு வந்தது.
அமெரிக்க மத்திய வங்கியை தொடர்ந்து, தற்போது ஐரோப்பிய மத்திய வங்கியும் வைப்பு நிதிக்கான வட்டியை, 0.25 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளது.
இதனால், சர்வதேச முதலீட்டாளர்கள், வைப்பு நிதியில் இருந்து தங்கள் முதலீட்டை திரும்ப பெற்று, தங்கத்தில் முதலீடு செய்து வருவதால், அதன் விலை அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை ஆபரண தங்கம் கிராம், 6,865 ரூபாய்க்கும்; சவரன், 54,920 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
வெள்ளி கிராம், 97 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஞாயிற்றுக் கிழமை தங்கம் சந்தைக்கு விடுமுறை. அன்று முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின.
நேற்று, தங்கம் விலை கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து, 6,880 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து, 55,040 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து, 98 ரூபாய்க்கு விற்கப்பட்டது.