காலி மதுபாட்டில்கள் பெறும் திட்டம் மாநிலம் முழுதும் செப்டம்பரில் அமல்
காலி மதுபாட்டில்கள் பெறும் திட்டம் மாநிலம் முழுதும் செப்டம்பரில் அமல்
ADDED : ஜூலை 06, 2024 02:50 AM
சென்னை,:'டாஸ்மாக் கடைகளில், காலி மதுப்பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம், செப்டம்பர் முதல், மாநிலம் முழுதும் அமல்படுத்தப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வனம், வன விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை, நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. மலை பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்பவர்கள், ஆங்காங்கே பிளாஸ்டிக்பாட்டில்களை, மது பாட்டில்களை துாக்கி வீசுகின்றனர். இதனால், வன உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது.
இதை தடுக்கும்விதமாக, மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில், மது பாட்டில்களை கூடுதலாக, 10 ரூபாய்க்கு விற்பனை செய்து, காலி பாட்டில்களை திரும்ப தரும் பட்சத்தில், 10 ரூபாயை திருப்பி தரும் வகையிலான திட்டத்தை அமல்படுத்தும்படி, நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.
இந்த வழக்கு, சிறப்பு அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, திரும்ப பெற்ற மதுப்பாட்டில்களை விற்பனை செய்ததன் வாயிலாக, 250 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்க உள்ளது என, மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மாநிலத்தில் நாளொன்றுக்கு எத்தனை மதுபாட்டில்கள்விற்கப்படுகின்றன என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில், 'ஒரு நாளைக்கு 70 லட்சம் பாட்டில்கள்வரை விற்கப்படுகின்றன. முதற்கட்டமாக மலைவாசஸ்தலங்களில், காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டது.
கடலுார், அரியலுார், புதுக்கோட்டை உள்பட 12 மாவட்டங்களில், ஜூலை 15ம் தேதி முதல் காலி மதுப்பாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டம் அமலுக்கு வருகிறது. செப்டம்பர் முதல், மாநிலம் முழுதும் அமல்படுத்தப்பட உள்ளது' என தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை, ஆக.,7க்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.