பஸ்சில் கேமரா பொருத்தினால் மட்டுமே பள்ளிக்கு அங்கீகாரம்
பஸ்சில் கேமரா பொருத்தினால் மட்டுமே பள்ளிக்கு அங்கீகாரம்
ADDED : ஏப் 27, 2024 12:48 AM
சென்னை:'தனியார் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தால் தான் அங்கீகாரம் வழங்கப்படும்' என, பள்ளிக் கல்வி அதிகாரிகள் நிபந்தனை விதித்துள்ளனர்.
புதிய கல்வி ஆண்டு ஜூன் 1ம் தேதி துவங்க உள்ள நிலையில், தனியார் பள்ளிகள் தரப்பில் அங்கீகாரம் புதுப்பித்தல், அங்கீகாரம் நீட்டித்தல் போன்றவற்றுக்கு, தனியார் பள்ளிகள் இயக்குனரகத்தில் விண்ணப்பித்து வருகின்றன.
இதில், பள்ளிகளின் உள்கட்டமைப்பு, ஆசிரியர் நியமனம், பள்ளி வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வகுப்பறை, நுாலக கட்டடங்கள், விளையாட்டு மைதான வசதி போன்றவை குறித்த தகவல்கள் பெறப்படுகின்றன.
அதைத் தொடர்ந்து, தனியார் பள்ளி வாகனங்களின் உரிமம் புதுப்பிப்பு பணியின் போது, அதிலுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு செய்யப்படுகின்றன.
வாகனங்களின் உரிமம் புதுப்பிக்கப்பட்டாலும், நீதிமன்ற உத்தரவுகளின்படி, வாகனங்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் மாணவ, மாணவியருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்க வேண்டியது கட்டாயம் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

