'ரூட்'டை மாற்றிய குருவிகள் மடக்கி பிடித்த அதிகாரிகள்
'ரூட்'டை மாற்றிய குருவிகள் மடக்கி பிடித்த அதிகாரிகள்
ADDED : ஆக 18, 2024 01:23 AM
சென்னை:சென்னைக்கு, அபுதாபி, துபாயில் இருந்து அதிகளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக, இரு தினங்களுக்கு முன், மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள், சென்னை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
துபாய் மற்றும் அபுதாபியில் இருந்து சென்னைக்கு முன்பதிவு செய்திருந்த இரு பயணியர், திடீரென டிக்கெட்டை ரத்து செய்து விட்டு, கர்நாடகா மாநிலம் பெங்களூரு விமான நிலையத்திற்கு முன்பதிவு செய்தது, அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
இருவரும், தங்கம் கடத்தும் குருவிகள் என்பதும், பல முறை வெளிநாடு சென்று திரும்பியதும் உறுதியானது.
இதையடுத்து, தனிப்படை அமைத்த வருவாய் புலனாய்வு அதிகாரிகள், நேற்று முன்தினம் பெங்களூரு விமான நிலையம் சென்று, அங்கு தரையிறங்கும் விமானங்களை தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது, துபாய், அபுதாபியில் இருந்து இரு விமானங்கள் வந்தன.
அதில் வந்த இரண்டு கடத்தல்காரர்களை மடக்கி பிடித்த அதிகாரிகள், தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.
அவர்கள் உள்ளாடைக்குள், 5.20 கோடி ரூபாய் மதிப்பிலான, 7.5 கிலோ தங்க பசைகளை மறைத்து வைத்து, கடத்தி வந்துஉள்ளனர். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.