ADDED : ஜூன் 27, 2024 01:56 AM
சட்டசபையில் தங்கம் தென்னரசு பதிலுரை:
இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 2021 - 22ம் ஆண்டு பட்ஜெட்டில், 63,746 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதற்கான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. அதே நேரத்தில், 2022ம் ஆண்டு நாக்பூர், கொச்சி மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
சென்னை மெட்ரோ திட்டத்திற்கு மாநில நிதி செலவிடப்பட்டு வருகிறது. இதனால், கடுமையான நிதிச் சுமை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் நியாயமற்ற செயலால், தமிழக அரசிற்கு 12,000 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டு உள்ளது.
மத்திய அரசு உரிய நிதி வழங்கியிருந்தால், மாநில அரசின் 12,000 கோடி ரூபாயை பயன்படுத்தி, பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருக்கலாம். உதாரணத்திற்கு, 25,000 புதிய பஸ்களை வாங்கி இருக்கலாம்; 30,000 கி.மீ., கிராம சாலைகளை மேம்படுத்தி இருக்கலாம்; 50,000 வகுப்பறைகளையும், 3.50 லட்சம் வீடுகளையும் கட்டி இருக்கலாம்.
மத்திய அரசின் நடவடிக்கையால், 12,000 கோடி ரூபாயை மட்டுமின்றி, இத்தனை திட்டங்களையும் சேர்த்தே இழந்துள்ளோம். மிக்ஜாம் புயல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு, 37,906 கோடி ரூபாய் நிவாரணமாக கேட்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு, 276 கோடி ரூபாய்தான் கொடுத்துள்ளது.
பொன் வைக்கும் இடத்தில் பூ வைக்கவும், மத்திய அரசு தயாராக இல்லை. பனை ஏறி விழுந்தவனை கிடா ஏறி மிதித்த கதையாக இது உள்ளது. ஏற்கனவே பேரிடரில் நாங்கள் துன்பப்படும்போது, இது எந்த வகையில் நியாயம்?
இவ்வாறு அமைச்சர் கூறினார்.