ADDED : செப் 17, 2024 10:17 PM
சென்னை:சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் நீலகிரி, ராணிப்பேட்டை உள்ளிட்ட சில பகுதிகளில் லேசான மழை பெய்துள்ளது. ஆனால், சமவெளிப் பகுதிகளில், தொடர்ந்து வெப்பத் தாக்கம் அதிகமாக உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், இன்று இயல்பைவிட, 4 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும். சென்னையில், பகல் நேரத்தில், 102 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 39 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தன்னார்வ வானிலை ஆய்வாளர்கள் கூறியதாவது:
கேரளாவில் இருந்து தமிழகம் நோக்கி வரவேண்டிய ஈரக்காற்று திசை மாறியதால், வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது.
செப்., 22ல் வங்கக்கடலில் புதிதாக வளிமண்டல சுழற்சி உருவாகி, அது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது. இந்த நிகழ்வின்போது, மேற்கில் இருந்து தமிழகம் நோக்கி ஈரக்காற்று திரும்ப வாய்ப்புஉள்ளது.
இதனால், செப்., 22க்குப் பின், வெயிலின் தாக்கம் படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

