நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்காலம் மேலும் மூன்றாண்டுக்கு நீட்டிப்பு
நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்காலம் மேலும் மூன்றாண்டுக்கு நீட்டிப்பு
ADDED : செப் 09, 2024 06:05 AM

சென்னை : 'கேரளாவில் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை, மலையாள திரையுலகை உலுக்கியுள்ளது. அறிக்கை வெளியான தைரியத்தில், பல நடிகையர் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான பாலியல் தொந்தரவுகள் குறித்து, வெளிப்படையாக கூறி வருகின்றனர்.
இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது பொதுக்குழு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் நடிகர் டில்லி கணேஷ், சி.ஆர்.விஜயகுமாரி ஆகியோருக்கு, கலையுலக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
பின், கூட்டத்தில் கூறப்பட்டதாவது:
பாலியல் புகாரில் சிக்கும் நடிகர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், திரைத்துறையில் பணியாற்ற ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப்படும். புகார் அளிக்க சிறப்பு எண்களும், மின்னஞ்சல் முகவரியும் வழங்கப்பட்டுள்ளது
பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் அளிக்கவும், சட்ட நடவடிக்கை எடுக்கவும், சங்கம் துணை நிற்கும்
சமூக வலைதளங்களில், திரைக்கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பற்றி அவதுாறாக கருத்துகளை தெரிவித்தால், சைபர் கிரைமில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க நடிகர் சங்கம் துணை நிற்கும்
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம், 2025 பிப்ரவரியுடன் முடியும் நிலையில், மேலும், மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடிக்க ஏதுவாகவும், கலை விழா நடத்தி நிதி திரட்டவும், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ரஜினி, கமல் கைகோர்ப்பு
கூட்டத்தில், பொருளாளர் கார்த்தி பேசுகையில், “நடிகர் சங்க கட்டடம் கட்டுவதில், விலைவாசி உயர்வு காரணமாக நிதிச்சுமை அதிகரித்துள்ளது. நடிகர் சங்க கடனை அடைக்க, கலைநிகழ்ச்சி நடத்த முடிவாகி உள்ளது.
“கலை நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் பங்கேற்பதாக உறுதியளித்தனர். நடிகர் விஜய் கடனாக இல்லாமல் நிதியாக, 1 கோடி ரூபாய் அளித்துள்ளார்,” என்றார்.
- நடிகை ரோகிணி
தலைவர், விசாகா கமிட்டி