பட்ஜெட்டில் போலித்தனமே அதிகம் த.வெ.க., தலைவர் விஜய் காட்டம்
பட்ஜெட்டில் போலித்தனமே அதிகம் த.வெ.க., தலைவர் விஜய் காட்டம்
ADDED : மார் 15, 2025 12:04 AM
தமிழக அரசின் பட்ஜெட்டில், புதிதாக ஒன்பது இடங்களில் தொழிற்பேட்டை, பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை உள்ளிட்ட அறிவிப்புகளை வரவேற்கிறோம்.
அறிவிப்புகள் எல்லாம் நடைமுறைக்கு வருமா என்ற, பலமான கேள்வி எழாமல் இல்லை. இதற்கு, இந்த அரசின் கடந்த கால வெற்று விளம்பர அறிவிப்புகளே காரணம்.
அடிப்படையான சாலை வசதிகளை கவனிக்காமல், அன்புச்சோலை போன்ற போலி அக்கறை காட்டும் வெற்று அறிவிப்பு ஏன்? கல்லுாரி மாணவர்களுக்கு மீண்டும் மடிக்கணினி வழங்குவது போல, பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது குறித்த அறிவிப்பு இல்லையே!
அண்ணா பல்கலையை தரவரிசையில் மேம்படுத்தும் அறிவிப்பு இருக்கட்டும், முதலில், அண்ணா பல்கலை மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். பரந்துார் விமான நிலையம் அமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பு, அப்பகுதி மக்களுக்கு செய்யும் துரோகமாக இருக்கும்.
காஸ் மானியம், 100 ரூபாய் வழங்குவது, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, மாதந்தோறும் மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் என்னவானது என்று தெரியவில்லை. இந்த பட்ஜெட் அறிவிப்பில் போலித்தனமே அதிகம் உள்ளது.
சாதாரண நிலையில் இருக்கும் பொதுமக்கள் நேரடியாக பலன் அடையும் அறிவிப்புகள் இல்லை. இந்த ஏமாற்று வேலைகளுக்கு எல்லாம், மக்கள் கொடுக்கும் மிகப்பெரிய பதிலடியாக, 2026 சட்டசபை தேர்தல் முடிவுகள் இருக்கும்.