பிரதமருக்கு எதிராக வேட்பு மனு: கிளம்பிய விவசாயிகளுக்கு சிக்கல்
பிரதமருக்கு எதிராக வேட்பு மனு: கிளம்பிய விவசாயிகளுக்கு சிக்கல்
ADDED : மே 11, 2024 07:35 AM

தஞ்சாவூர்: பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில், 111 பேர் போட்டியிட போவதாக அறிவித்தனர்.
இதையடுத்து, கன்னியாகுமரி - பனாரஸ் காசி தமிழ் சங்கமம் ரயிலில், சங்க தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட 120 பேர் நேற்று புறப்பட்டனர். இதற்கிடையே, தொழில்நுட்ப கோளாறு எனக்கூறி, ஒரு பெட்டியை குறைத்து, அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகளின் முன்பதிவு ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே ஊழியர்கள் கூறினர். இதனால், தஞ்சாவூர் ஸ்டேஷனில் காலை, 6:43 மணிக்கு ரயில் புறப்பட இருந்த நேரத்தில் அபாய சங்கிலியை இழுத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரயில்வே அதிகாரிகள், போலீசார் பேச்சு நடத்தி, விழுப்புரத்தில் தனி பெட்டியை இணைத்து விவசாயிகள் பயணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். ஆனால், விழுப்புரம், செங்கல்பட்டில் 'கோச்' கொடுக்காத நிலையில், அய்யாக்கண்ணு போராட்டத்தில் ஈடுபட்டார். அனைவரும் செங்கல்பட்டில் இறக்கி விடப்பட்டனர். இதனால் அவர்கள் வாரணாசி செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அய்யாக்கண்ணு கூறுகையில், ''வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து 111 பேர் போட்டியிட முடிவு செய்தோம். வேட்பு மனு தாக்கல் செய்ய புறப்பட்டு சென்றோம். எங்களுக்கு 'எஸ் - 1' பெட்டி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மே 9ம் தேதி எஸ்.எம்.எஸ்., வந்தது. நேற்று திடீரென முன்பதிவு பெட்டி பழுதாகிவிட்டதாக கூறி முன்பதிவை ரத்து செய்துள்ளதாக கூறுகின்றனர்,'' என்றார்.
ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'எஸ் 1 பெட்டி பயணியருக்கு மற்ற பெட்டியில் இடம் வழங்கப்பட்டது. சிலருக்கு வெயிட்டிங் லிஸ்ட் வந்தது. அவர்களுக்கும் ஆர்.ஏ.சி., முறையில் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இது தொழில்நுட்ப கோளாறு. தேர்தலுக்கு எந்த தொடர்பும் இல்லை' என்றனர்.