ADDED : ஜூன் 18, 2024 09:48 PM
சென்னை:இசைக்கல்லுாரி மாணவரை பஸ்சில் இருந்து இறங்கச் சொல்லியதாக எழுந்த புகார் குறித்து, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆகாஷ். மதுரை அரசு இசைக்கல்லுாரி மாணவரான இவர், கடந்த 16ம் தேதி அதிகாலை கலைப் பொருட்களுடன் அரசு பஸ்சில் ஏறியுள்ளார். ஆனால், பயணம் துவங்கும் முன்னதாக நடத்துனர் இறங்கச் சொல்லியதாக கூறி, வீடியோவை வெளியிட்டிருந்தார்.
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிக்கை:
மாணவர் ஆகாஷ் கூறியது தொடர்பாக சம்பந்தப்பட்ட நடத்துனரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அவர், 'ஆகாஷ் எடுத்துவந்த பொருள் பஸ்சின் உள்ளே லக்கேஜ் கேரியரில் நீட்டிக் கொண்டு, மின் விளக்குகள் மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகளை உடைத்து விடும் போல இருந்தது.
இதனால், கடைசி இருக்கை அருகே இறக்கி வைக்க வேண்டும்' என நடத்துனர் கூறியுள்ளார். ஆனால், ஆகாஷ் தவறான புரிதல் காரணமாக வீடியோ எடுத்த பின், தாமாக பேருந்திலிருந்து இறங்கிச் சென்று விட்டதாக தெரிய வருகிறது.
கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கும் நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் இதர கலைஞர்கள், தொழில் முறையாக பயணம் செய்யும் போது, அரசு பஸ்களில், 50 சதவீத கட்டண சலுகையுடன் பயணம் மேற்கொள்ளவும், அவர்கள் இசைக் கருவிகள், தொழில் கருவிகளை கட்டணமில்லாமல் எடுத்துச்செல்லவும் அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.
இந்த சம்பவத்தை கவனத்தில் கொண்டு, இனி வரும் காலங்களில் இதுபோன்ற ஒரு நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர்கள், ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறியுள்ளார்.

