தமிழ் பண்பாட்டைத் தவிர்த்து விட்டு ஆன்மிக வரலாறு இல்லை:அமித் ஷா
தமிழ் பண்பாட்டைத் தவிர்த்து விட்டு ஆன்மிக வரலாறு இல்லை:அமித் ஷா
ADDED : பிப் 26, 2025 10:28 PM
கோவை:''தமிழக பண்பாட்டைத் தவிர்த்து விட்டு, பாரதத்தின் ஆன்மிக வரலாற்றை எழுதிவிட முடியாது,'' என, உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
கோவை, ஈஷா யோகா மையத்தில் நடந்த, மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்று, அவர் பேசியதாவது:
மகத்துவம் மிக்க, தெய்வீகமான தமிழ் மொழியில் பேச முடியாமைக்கு வருந்துகிறேன். இன்றைய தினம் சோம்நாத்தில் இருந்து கேதார் நாத் வரை, பசுபதி நாத்தில் இருந்து ராமேஸ்வரம் வரை, காசி முதல் கோவை வரை, சிவனின் திருவருளில் திளைத்துக் கொண்டிருக்கிறது.
பிரக்யாராஜ் மகா கும்பமேளா நிறைவடையும் தருணத்தில், கோவையில் பக்தி கும்பமேளாவாக இந்நிகழ்வு நடக்கிறது.
மகா சிவராத்திரி என்பது, சிவனும் பார்வதியும் தெய்வீக சங்கமம் நிகழ்த்திய நாள் மட்டுமல்ல, பரம் பொருளும் ஜீவாத்மாவும் சங்கமித்த, பக்திக்கான உன்னத திருநாளுமாகும்.
சிவன் வழிபாட்டுக்குரிய கடவுள் மட்டுமல்ல, பிரபஞ்சத்தின் மூலமும் அவரே. எல்லாவற்றுக்கும் மேலாக ஆதியோகியாக உள்ளார்.
ஈஷா யோகா மையம், உலகில் லட்சக்கணக்கான உயிர்களை, யோக மார்க்கமாக, சரியான பாதையில் செல்ல வழிகாட்டிக் கொண்டிருக்கிறது. சத்குரு வாயிலாக சனாதன தர்மம் என்றால் என்ன என்பதை, மக்கள் அறிந்து கொண்டிருக்கிறார்கள்.
தன்னலத்தில் இருந்து பிரபஞ்ச உணர்வு, அகங்காரத்தில் இருந்து ஒற்றுமை, பக்தியில் இருந்து அடுத்த நிலை, அறியாமையில் இருந்து ஞானோதயம் என்பதை, இந்த சிவராத்திரி நமக்குக் கற்பிக்கிறது.
மகா சிவராத்திரி பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். இங்கு வந்து பார்த்ததில் உலகுக்கு ஒன்றைச் சொல்கிறேன். இது மகத்தான, ஆச்சரியமான நிகழ்வு.
இவ்வாறு, அவர் பேசினார்.

