சூரியன், சந்திரனை வணங்குவதில் தவறில்லை இப்போது அங்கெல்லாம் கால் பதிக்கிறோமே! 'கண்டுபிடித்தார்' அமைச்சர் பொன்முடி
சூரியன், சந்திரனை வணங்குவதில் தவறில்லை இப்போது அங்கெல்லாம் கால் பதிக்கிறோமே! 'கண்டுபிடித்தார்' அமைச்சர் பொன்முடி
ADDED : ஆக 29, 2024 12:10 AM

சென்னை:''சந்திரன், சூரியனை வணங்குவதில் தவறில்லை,'' என, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில், முதல் தேசிய விண்வெளி தின விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவ - மாணவியருக்கு இடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
அதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா, சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் நடந்தது.
வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு பரிசுகளை வழங்கி, அமைச்சர் பொன்முடி பேசியதாவது:
படிக்கும்போதே மாணவர்கள் அறிவியல் சிந்தனையை வளர்க்க வேண்டும். அறிவியல் அறிவை வளர்க்கவே, இதுபோன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆரம்பக் கல்விக்கு வித்திட்டவர் காமராஜர் என்றால், உயர்கல்விக்கு வித்திட்டவர் கருணாநிதி.
பகுத்தறிவு அடிப்படையில் வளர்வது அறிவியல் அறிவு. கேள்வி கேட்டு வளர வேண்டும். விண்வெளி ஆராய்ச்சி சாதாரணமானது அல்ல.
சூரியன், சந்திரனை பார்த்து வணங்குகின்றனர்; அது தவறில்லை.தற்போது பூமி, சந்திரன் எப்படி சூரியனை சுற்றி வருகிறது என்பதை ஆராயவும், அங்கு தரையிறங்கும் காலமும் வந்துவிட்டது.
'சந்திரயான்' ஆய்வில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வீரமுத்துவேல், அரசு பள்ளியில் படித்தவர். அவரை போல மாணவர்கள் அறிவியல் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அமெரிக்காவில் உள்ள அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை கொண்டு வரவே, முதல்வர் அங்கு சென்றுள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், தொழில்நுட்ப கல்வி கமிஷனர் ஆபிரகாம், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் லெனின் தமிழ்க்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இன்ஜி., படிப்பில் இந்தாண்டு 17,000 பேர் கூடுதல் சேர்க்கை அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டி:
பல்கலை கழகங்களில் துணைவேந்தர் நியமனம் குறித்து, கேட்க வேண்டிய இடத்தில் கேளுங்கள். இன்ஜினியரிங் படிக்க விண்ணப்பித்த மாணவர்களின் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளன. அதில், மொபைல் போன் எண், முகவரியைத் தவிர மற்றவற்றை பார்க்கலாம்.
சில விஷமிகள், மாணவர்கள் தகவல்களில், போலி மொபைல் எண், முகவரி போட்டு வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக, 'சைபர் கிரைமில்' புகார் அளிக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. அண்ணா பல்கலையில், மோசடியாக ஆசிரியர் நியமனம் நடந்தது தொடர்பாக, 10 ஆண்டு கால அறிக்கையை, கமிட்டியிடம் கேட்டுள்ளோம்.
அண்ணா பல்கலையில் முதல்கட்ட சேர்க்கை முடிந்து, 1.23 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டில், 1.06 லட்சம் பேர் சேர்ந்தனர். இந்தாண்டு, 17,000 பேர் கூடுதலாக சேர்ந்துள்ளனர். மாணவர்கள் சேர்க்கை இன்னும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எந்தெந்த கல்லுாரிகளில், எந்தெந்த இடம் காலியாக உள்ளது என்ற விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினர்.