ADDED : ஜூலை 02, 2024 03:28 AM

சென்னை : தமிழகத்துக்கு தனியாக மாநில கல்வி கொள்கை தயாரிக்க, டில்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பித்தது.
அதில், அரசின் கல்வி நிறுவனங்களுக்கு போதிய நிதி ஒதுக்க முடியாததால், தனியார் கல்வி நிறுவனங்கள் அதிகம் வளர்ந்துள்ளன. எனவே, போதுமான நிதி ஒதுக்கி, உரிய வசதிகளுடன் கூடிய, தேவையான கல்வி நிறுவனங்களை அரசு துவங்க வேண்டும்.
சுயநிதி கல்வி நிறுவனங்களில் நன்கொடை வசூலிப்பதை அரசு தடுக்க வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்களும், பயிற்சி நிறுவனங்களும், கல்வியின் புனிதத்தன்மையை மதிக்காமல், வியாபாரப் பொருளாக விளம்பரம் செய்கின்றன; இவற்றை கட்டுப்படுத்த வேண்டும். தனியார் பயிற்சி மையங்களை, அரசின் ஒழுங்கு முறை அமைப்பின் கீழ் கொண்டு வர வேண்டும்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை, தங்கள் சிறப்பு பயிற்சி மையத்தில் படிக்க கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆங்கில வழி கல்விக்கு வரும் மாணவர்களிடம், அதிக கட்டணம் வசூலிக்காமல் அரசு கண்காணிக்க வேண்டும்.
சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட அனைத்து பாடத்திட்ட பள்ளிகளுக்கும், தமிழக அரசு கட்டண வரைமுறை மேற்கொள்வது கட்டாயம்.
அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளும், அரசு பள்ளிகள் போல கருதப்பட வேண்டும். இந்த பள்ளிகளில் உபரியாக ஆசிரியர்கள் நியமித்தல், ஒழுங்குமுறை இன்றி கட்டணம் வசூலித்தல், போலியாக மாணவர்கள் எண்ணிக்கை காட்டுதல் போன்ற பிரச்னைகள் உள்ளதால், விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என்பது உட்பட பல பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.