ADDED : ஏப் 28, 2024 01:51 AM
சென்னை: -'போக்குவரத்து துறையில் ஆட்குறைப்பு இருக்காது' என, அமைச்சு பணியாளர்களுடன் நடந்த பேச்சில், போக்குவரத்து ஆணையர் உறுதி அளித்து உள்ளார்.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க நிர்வாகிகள் பால்பாண்டியன், வேழவேந்தன் ஆகியோர் கூறியதாவது:
போக்குவரத்து துறையில் அமைச்சு பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற முடிவை கைவிட வேண்டும்; போக்குவரத்து துறையில், 40 வட்டார போக்குவரத்து அலுவலர்கள், அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், உதவியாளர், கண்காணிப்பாளர், மோட்டார் வாகன ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இருக்கும் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டுமென வலியுறுத்தி போராட்டம் அறிவித்தோம்.
இதற்கிடையே, போக்குவரத்து ஆணையரக அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் பேச்சு நடந்தது.
போக்குவரத்து துறையில் அமைச்சு பணியாளர் எண்ணிக்கை குறைக்கப்படாது என, போக்குவரத்து ஆணையர் உறுதி அளித்தார்.
இதர கோரிக்கைகளையும் படிப்படியாக நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார். இதையடுத்து, எங்களது போராட்டத்தை கைவிட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

