திருட முயன்றவருக்கு நுாதன தண்டனை திருக்கோவிலுார் கோர்ட் தீர்ப்பு
திருட முயன்றவருக்கு நுாதன தண்டனை திருக்கோவிலுார் கோர்ட் தீர்ப்பு
ADDED : ஆக 25, 2024 05:29 AM
திருக்கோவிலுார்: திருட முயன்றவர், 2 ஆண்டு நன்னடத்தை அதிகாரியின் கண்காணிப்பில் இருக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த தகடி கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார்,48; இவரது வீட்டில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி திருட முயன்ற நபரை, பொதுமக்கள் உதவியுடன் பிடித்து திருப்பாலபந்தல் போலீசில் ஒப்படைத்தார்.
விசாரணையில், அவர் நத்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் ஆனந்தன்,27; அருகில் உள்ள ஒரு வீட்டில் டைல்ஸ் வேலை செய்து வந்தது தெரியவந்தது. புகாரின் பேரில் ஆனந்தனை கைது செய்த போலீசார், அவர் மீது திருக்கோவிலுார் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், திருட முயன்ற பிரிவில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் வெங்கடேஷ்குமார், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆனந்தனின் பொருளாதார சூழல் மற்றும் தொடர்ந்து நீதிமன்ற காவலில் இருந்து வருவதை கருத்தில் கொண்டு, நன்னடத்தைச் சட்ட பிரிவு 4ன் கீழ் அவர், 2 ஆண்டுகள் நன்னடத்தை அதிகாரியின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். நடத்தையை மீறினால் உரிய தண்டனை விதிக்கப்படும் என தீர்ப்பளித்தார்.

