62 அடி உயர வி.சி., கொடி கம்பம் அகற்றம் மதுரையில் நள்ளிரவு போராட்டத்தால் பதற்றம் கலெக்டர் சங்கீதா மீது திருமாவளவன் குற்றச்சாட்டு
62 அடி உயர வி.சி., கொடி கம்பம் அகற்றம் மதுரையில் நள்ளிரவு போராட்டத்தால் பதற்றம் கலெக்டர் சங்கீதா மீது திருமாவளவன் குற்றச்சாட்டு
ADDED : செப் 14, 2024 09:07 PM

மதுரை:மதுரையில் அனுமதியின்றி ஊன்றப்பட்ட 62 அடி உயர விடுதலை சிறுத்தைகள் கொடி கம்பத்தை போலீசார் அகற்றினர். அதனால், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நிர்வாகிகள், தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் கொடிக் கம்பம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
விடுதலைச் சிறுத்தை கட்சியை திருமாவளவன் துவக்கியபோது, அதன் நினைவாக மதுரை புதுாரில் கட்சிக்கொடி ஏற்றப்பட்டது. ஐந்தாண்டுகளுக்கு முன் ரோடு விரிவாக்கத்திற்காக அக்கொடி கம்பம் அகற்றப்பட்டது. இதற்கு மாற்றாக புதுார் மாரியம்மன் கோயில் தெரு பகுதியில் வி.சி., கட்சியினர் 25 அடி உயர கம்பம் அமைத்து கொடியேற்றினர்.
இந்நிலையில் 62 அடி உயர மற்றொரு கொடி கம்பத்தை இப்பகுதியில் ஊன்றினர். போலீசார் அதை அகற்றினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வி.சி., நிர்வாகிகள் 100 பேர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலெக்டர் சங்கீதாவிடம் அவர்கள் முறையிட்டபோது, 'விதிகள் படிதான் மாவட்ட நிர்வாகம் செயல்பட முடியும்' என தெரிவித்தார். நேற்று காலை அவரின் நேர்முக உதவியாளரை சந்தித்து, 62 அடி உயர கொடிக் கம்பத்தை ஊன்ற மனு அளித்தனர்.
இந்நிலையில், நேற்று மதுரை வந்த கட்சி தலைவர் திருமாவளவன், 'மதுரை கலெக்டராக சங்கீதா பொறுப்பேற்ற நாளிலிருந்து, வி.சி., எங்கு கொடி ஏற்றினாலும் தேவையில்லாமல் குறுக்கிடுகிறார். உயர் நீதிமன்றத்தில் ஆணை பெற்ற பிறகும், திருமங்கலம் அருகே மேலப்பட்டி என்ற இடத்தில் கொடியேற்ற அனுமதி தாருங்கள் என்று சொன்ன பிறகும், அனுமதி தர மறுக்கிறார். புதுாருக்கு அருகில் ஏற்கனவே இருந்த கொடி கம்பம் அகற்றப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எதிராக தனிப்பட்ட முறையில் கலெக்டர் செயல்படுவதாக தெரிகிறது' என ஆவேசமாக கூறினார்.
இந்நிலையில், போலீசாருடன் மாவட்ட நிர்வாகம் ஆலோசித்தது.
அதில், தற்போதுள்ள 25 அடி உயர கம்பத்தை அகற்றினால், 62 அடி உயர கம்பத்தை ஊன்ற அனுமதிக்கலாம்' என முடிவானது. இதை வி.சி.,க்களும் ஏற்றுக் கொண்டனர். அதையடுத்து, ஏற்கனவே போலீசார் அகற்றிய கொடி கம்பம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து புதுாருக்கு வந்த திருமாவளவன், கொடி கம்பம் அமைய உள்ள இடத்தை பார்த்துவிட்டு, செப்.20ல் கொடி ஏற்றுவதாக நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.