ADDED : மார் 09, 2025 01:23 AM

சென்னை: ''புதிய கட்சியின் யூகங்கள் எல்லாம் செய்தியாகின்றன. ஆனால், நம்மை ஒரு கட்சியாக ஏற்காமல் புறம் தள்ளும் சூழல் நிலவி வருகிறது,'' என, வி.சி., தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
சென்னை, அசோக் நகரில் உள்ள, கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த, மகளிர் தின விழாவில், அவர் பேசியதாவது:
தற்போது, கட்சி துவங்கினாலே, யூகங்கள் எல்லாம் செய்தியாகின்றன. இப்போதே, 20 சதவீதம், 24 சதவீதம் ஓட்டு பெற முடியும். அடுத்த முதல்வர் இவர்தான் என வலிந்து பூதாகரப்படுத்துகின்றனர். இன்னும் ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை. ஓட்டு சதவீதம் எவ்வளவு என யாருக்கும் தெரியாது. ஆனாலும், சமூகம் எத்தகைய அணுகுமுறையை கொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
இத்தகைய சமூகத்தில் தான் போராடிப் போராடி அங்கீகாரம் பெற்றிருக்கிறோம். மற்றவர்கள், 100 மீட்டர் ஓடி பரிசு பெறும் இடத்தில், நாம், 10,000 மீட்டர் ஓடி இருக்கிறோம். வி.சி.,யை கட்சியாக ஏற்காமல், புறந்தள்ளும் சூழலில் இருக்கிறோம். நம் ஓட்டு வங்கி வலிமை பெற வேண்டும். அனைத்து மக்களின் நன்மதிப்பைப் பெற்று, தொடர்ந்து சட்டசபையிலும், லோக்சபாவிலும் இடம்பெற வேண்டும். அப்போதுதான், அதிகாரப்பகிர்வை வென்றெடுக்க முடியும்.
ஹிந்தியை படித்தால் வேலை கிடைக்கும் என்பது உண்மையாக இருந்தால், அதை தேடி படிப்பவர்களை, யாரும் தடுக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.