மோசடியில் இது புதிய ரகம்; 'ஏசி' விற்போருக்கே வியர்க்கிறது
மோசடியில் இது புதிய ரகம்; 'ஏசி' விற்போருக்கே வியர்க்கிறது
ADDED : பிப் 23, 2025 07:03 AM

கோவை : போலி ஆவணங்கள் தயாரித்து, பல்வேறு 'ஏசி' ஷோரூம்களில் இருந்து, ஏசி வாங்கும் புதுவித மோசடி கோவையில் அரங்கேறி வருகிறது.
கோவை மாவட்டம், சூலுார் போகம்பட்டியை சேர்ந்தவர் தினேஷ் குமார்; சிறுவாணி ஏர் கண்டிஷனிங் என்ற பெயரில் 'ஏசி' ஷோரூம் நடத்தி வருகிறார். இவரது 'வாட்ஸாப்' எண்ணுக்கு, கடந்தாண்டு நவம்பரில் ஒரு அழைப்பு வந்தது.
அதில் பேசியவர், தான் சிவகுமார் என்றும், 'பிரணவ் ஹார்டுவேர்ஸ்' நிறுவனத்தில் பணியாற்றுவதாகவும், தங்கள் நிறுவனத்திற்கு இரண்டு 'ஏசி' வேண்டும் எனக்கூறி, விலை விபரம் கேட்டார்.
தினேஷ் குமார் விபரங்களை அனுப்பினார். இதையடுத்து, அவர் போலியாக தயாரிக்கப்பட்ட நிறுவனத்தின் ஜி.எஸ்.டி., - யு.டி.ஆர்., எனப்படும், பண பரிமாற்ற எண் உள்ளிட்டவற்றை, தினேஷ் குமாருக்கு அனுப்பினார்.
இதை நம்பிய தினேஷ், மோசடி நபர்கள் அனுப்பிய டெலிவரி நிறுவன வாகனத்தில், 'ஏசி'யை அனுப்பினார். பின்னர் பார்த்த போது, தினேஷ் வங்கி கணக்கில் பணம் வரவில்லை. அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, கோட்டைமேட்டை சேர்ந்த ஷேக் அப்துல் காதர், 40, சலீம், 48, குனியமுத்துாரை சேர்ந்த மன்சூர், 42, ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. போலீசார் மூவரையும் சிறையில் அடைத்தனர்.
விசாரணையில், 'ஏசி' ஷோரூம்களுக்கு போன் செய்து, ஏசி ஆர்டர் செய்து, பணம் அனுப்பியது போல, போலி ஆவணங்களை அனுப்பி, ஏசி வாங்குவதும், பின்னர், டெலிவரி நிறுவனங்களில் வாகனம், 'புக்' செய்து, 'ஏசி'யை எடுத்து வர செய்து, டெலிவரி வாகனத்தை பாதியில் வழியில் நிறுத்தி, தங்களின் வேறு வாகனத்தில் ஏசியை மாற்றி எடுத்துச் செல்வது தெரிந்தது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், இதுபோல், 14க்கும் மேற்பட்ட 'ஏசி'களை மோசடியாக வாங்கி, குறைந்த விலைக்கு விற்றது தெரியவந்தது.
இந்நிலையில், கோவை இருகூரை சேர்ந்த 'ஏசி' ஷோரூம் நிறுவனர் ரமேஷ், 28, தானும் இதே போல் ஏமாற்றப்பட்டதாக, சைபர் கிரைம் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். இந்த மோசடியில் பலர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
போலீசார் கூறுகையில், 'கோடை துவங்குவதால் குறைந்த விலைக்கு 'ஏசி' கிடைக்கிறது என நம்பி, அங்கீகாரமற்ற கடைகள் அல்லது வெளியாட்களிடம் இருந்து 'ஏசி' வாங்குவதை, பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
வாங்கினால் பறிமுதல் செய்யும் நிலை ஏற்படும். இதுபோன்ற மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள், சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கலாம்' என்றனர்.