இதுதான் 'ரியல் ரோடு ஷோ' வருங்காலத்துக்கு வழிகாட்டிய பழனிசாமி
இதுதான் 'ரியல் ரோடு ஷோ' வருங்காலத்துக்கு வழிகாட்டிய பழனிசாமி
ADDED : ஏப் 18, 2024 12:15 AM
சேலம்:''தி.மு.க., கூட்டணி கட்சியில் வெற்றி பெற்ற, 37 எம்.பி.,க்கள், அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி, 367 கோடி ரூபாயை பயன்படுத்தவில்லை. அப்படிப்பட்டவர்கள் எப்படி மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவர்?'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
சேலம் லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் விக்னேஷுக்கு ஆதரவாக, அஸ்தம்பட்டியில் இருந்து வின்சென்ட், குமாரசாமிப்பட்டி, அம்பேத்கர் சிலை, மேம்பாலம், வள்ளுவர் சிலை வழியே கன்னிகா பரமேஸ்வரி கோவில் வரை, அக்கட்சி பொதுச்செயலர், இ.பி.எஸ்., பங்கேற்ற, 'ரோடு ஷோ' நிகழ்ச்சி, நேற்று நடந்தது.
பச்சை பொய்
அதில், பழனிசாமி பேசியதாவது:
மத்திய, மாநில அரசுகள், மக்கள் விரோத ஆட்சியை நடத்துகின்றன. இதற்கு முடிவு கட்டும் வகையில், அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டு வெற்றி பெற செய்ய வேண்டும்.
அன்று சேலம் மட்டுமின்றி மாநிலம் முழுதும் சட்டத்தின் ஆட்சி நடந்தது. நேரடியாக சந்தித்து குறைகளை தெரிவிக்கும் வாய்ப்பு இருந்தது. இன்று ஸ்டாலின் வீட்டு கேட்டைக் கூட தொட முடியாது.
கடந்த, 2019ல், 37 பேர், தி.மு.க., கூட்டணி கட்சியில் வெற்றி பெற்றனர். அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி, 367 கோடி ரூபாய் பயன்படுத்தவில்லை. அதாவது இவர்கள், 75 சதவீத நிதியை செலவே செய்யவில்லை. அப்படிப்பட்டவர்கள் எப்படி மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவர்?
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக அவர் அளித்த பேட்டி:
தி.மு.க., 2021ல் கொடுத்த 520 தேர்தல் வாக்குறுதிகளில், 10 சதவீதத்தை மட்டும் நிறைவேற்றிவிட்டு, 98 சதவீதம் நிறைவேற்றிவிட்டதாக ஸ்டாலின் பச்சைப்பொய் பேசி வருகிறார்.
கடந்த 2014ல் கச்சா எண்ணெய் 105 டாலராக இருந்தபோது, பெட்ரோல் விலை லிட்டர் 71 ரூபாய்க்கும், டீசல் 57 ரூபாய்க்கும் விற்கப்பட்டன. தற்போது கச்சா எண்ணெய் 86 டாலராக உள்ள நிலையில், பெட்ரோல் 102 ரூபாயாகவும், டீசல் 94 ரூபாயாகவும் உள்ளன.
ஓட்டுகளை குறிவைத்து
கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்த போதும், வரிகளை உயர்த்தி, மக்கள் தலையில் சுமத்தி வரும் மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.
'இண்டியா' கூட்டணியில் பிரச்னை வரும் என்பதால், கருத்து கூட தெரிவிக்காமல் தி.மு.க., மவுனம் காக்கிறது. கருத்துக்கணிப்புகளை எல்லாம் பொருட்படுத்தாமல், எறும்பைப் போல், தேனீயைப் போல் சுறுசுறுப்பாக களப்பணியாற்றி, 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம். அடிக்கடி பிரதமர் தமிழகத்துக்கு வருவது, திட்டங்களை துவக்கி வைக்க என்றால் வரவேற்கலாம். தற்போது ஓட்டுகளை குறிவைத்து வருவதால், எத்தனை முறை வந்தாலும் பயனில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

