சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க மூன்று நீதிமன்றங்களுக்கு அனுமதி
சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க மூன்று நீதிமன்றங்களுக்கு அனுமதி
ADDED : மே 23, 2024 02:52 AM
சென்னை:பழங்கால சிலைகள் மற்றும் கலை பொருட்கள் கடத்தல் தொடர்பான வழக்குகள் தேங்கி கிடப்பதை தவிர்க்க சென்னை மதுரை மற்றும் கும்பகோணம் சிறப்பு நீதிமன்றங்கள் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 36,500 கோவில்கள் உள்ளன. அவற்றில் 4.30 லட்சத்திற்கும் மேற்பட்ட சிலைகள் மற்றும் கலைப்பொருட்கள் உள்ளன. இதில் 3000 சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன. இதன் சர்வதேச மதிப்பு 40,000 கோடி ரூபாய். அமெரிக்க வாழ் இந்தியரான சுபாஷ் சந்திரகபூர் மற்றும் அவரது கூட்டாளிகள் தீனதயாள், வல்லப பிரகாஷ், ஆதித்ய பிரகாஷ், சஞ்சீவி, அசோகன் உள்ளிட்டோரால் 2900 சிலைகள் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக ஜெர்மனியில் 2011ல் சுபாஷ் சந்திரகபூர் கைது செய்யப்பட்டார். அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்; தீனதயாளன் இறந்து விட்டார்; மற்றவர்கள் ஜாமினில் வெளியே உள்ளனர்.
தமிழகத்தில் சிலை கடத்தல் மற்றும் கலைப் பொருட்கள் கடத்தல் தொடர்பான வழக்குகள் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மட்டுமே விசாரிக்கப்பட்டு வந்தன. கடத்தல்காரர்கள் எந்த இடத்தில் சிக்கினாலும் இந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தான் சிறையில் அடைக்க வேண்டிய நிலை இருந்தது.
இதனால்குற்றவாளியை பல நுாறு கி.மீ. அழைத்துச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இந்த நடைமுறை சிக்கலுக்கு தீர்வு காண இந்த வழக்குகளை மதுரை, கும்பகோணம் மற்றும் சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றங்கள் விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து வடக்கு தெற்கு மத்தி என மண்டல எல்லைகள் பிரிக்கப்பட்டு அந்தந்த பகுதிகளில் நடந்த சிலை கடத்தல் மற்றும் கலை பொருட்கள் தொடர்பான வழக்குகள் இம்மூன்று நீதிமன்றங்களிலும் விசாரிக்கப்பட உள்ளன.

