2026 தேர்தலில் மும்மொழிக்கொள்கை: பா.ஜ.,வுக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்!
2026 தேர்தலில் மும்மொழிக்கொள்கை: பா.ஜ.,வுக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்!
ADDED : மார் 07, 2025 12:32 PM

சென்னை: ''மும்மொழிக் கொள்கையை மையமாக கொண்டு வரும் 2026ம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று பா.ஜ.,வுக்கு சவால் விடுகிறேன்,'' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: மரங்கள் அமைதியை விரும்பினாலும், காற்று ஒருபோதும் சும்மா இருப்பதில்லை.நாம், நம் பணியை மட்டும் செய்து கொண்டிருந்தபோது, மத்திய கல்வி அமைச்சர் தான் நம்மை துாண்டி விட்டு தொடர் கடிதங்களை எழுத வைத்தார்.
அவர் தன் இடத்தை மறந்து விட்டார். ஹிந்தி திணிப்பை ஏற்கும்படி ஒரு மாநிலத்தையே அச்சுறுத்த துணிந்தார். தன்னால் வெற்றி பெற முடியாத ஒரு போரை துாண்டியதற்கான எதிர்விளைவை இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறார். தேசிய கல்வி கொள்கையில் உள்ள பெரிய முரண்பாடு என்னவென்றால், இதனை நிராகரிக்கும் தமிழகம், இதன் இலக்குகளை ஏற்கனவே அடைந்துவிட்டது.
இந்தக் கொள்கை 2030க்கென இலக்கை நிர்ணயித்துள்ளது. இது ஒரு எல்.கே..ஜி., மாணவர் முனைவர் பட்டம் பெற்றவருக்கு அறிவுரை வழங்குவது போல் உள்ளது. திராவிடம், டில்லியின் உத்தரவுகளை ஏற்காது. மாறாக நாடு பின்பற்ற வேண்டிய பாதைகளை உருவாக்குகிறது.தற்போது மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பா.ஜ, நடத்தும் கையெழுத்து இயக்கம் தமிழகத்தில் ஒரு நகைப்புக்குரிய சர்க்கஸ் போன்று மாறிவிட்டது.
அவர்கள் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மும்மொழிக் கொள்கையை மையமாக கொண்டு பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என சவால் விடுகிறேன். அது ஹிந்தி திணிப்பு தொடர்பான கருத்து வாக்கெடுப்பாக அமையட்டும். வரலாறு தெளிவாக உள்ளது. தமிழகத்தில் ஹிந்தியைத் திணிக்க முயன்றவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.
பின்னர் அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு தி.மு.க.,வுடன் இணைந்தனர். பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு பதிலாக ஹிந்தி காலனித்துவத்தை தமிழகம் சகித்துக் கொள்ளாது. திட்டங்களின் பெயர்கள் முதல் மத்திய அரசு நிறுவனங்களுக்கான விருதுகள் வரை, இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கும் ஹிந்தி பேசாதவர்களை மூச்சுத் திணறடிக்கும் அளவுக்கு ஹிந்தி திணிக்கப்பட்டு உள்ளது.
மனிதர்கள் வரலாம்; போகலாம். ஆனால், இந்தியாவில் ஹிந்தி ஆதிக்கம் தகர்க்கப்பட்டு பல காலம் கழிந்த பிறகும், அதற்காக முன்னணியில் நின்றது தமிழகம் தான் என்பதை வரலாறு நினைவில் வைத்திருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.