ADDED : ஜூலை 01, 2024 03:13 AM
பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் போதைப்பொருட்கள், கஞ்சா கடத்தல் வழக்கில் தொடர்புடைய மேலும் மூவர் நேற்று கோவை, பெங்களூருவில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 35 கிராம் 'மெத்தபெட்டமைன்' கைப்பற்றப்பட்டது. அவற்றை சப்ளை செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரியகுளம் வடகரை இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் மற்றும் போலீசார் எ. புதுப்பட்டி பைபாஸ் ரோட்டில் நேற்று முன் தினம் அதிகாலை 2:10 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர். கொடைக்கானலில் இருந்து கம்பம் சென்ற கேரளா பதிவு எண் கொண்ட (கே.எல்.54. ஜி 6124) காரை சோனையிட்டனர். அதில் 250 கிராம் கஞ்சா, ஒரு பாக்கெட் கஞ்சா சிகரெட் இருந்தது. மேலும் 50 கிராம் எடையில் 30 ' மெத்தபெட்டமைன்' பாக்கெட்டுகள் இருந்தன. அதன் மதிப்பு ரூ.1.75 லட்சம். கார் மற்றும் போதைப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நாயுடுபுரம் விகாஸ் ஷியாம் 22, அதே பகுதியைச் சேர்ந்த ஆரீப்ராஜா 22, தேனி மாவட்டம் கம்பம் நாராயணத்தேவன்பட்டி ராம்குமாரை 33, கைது செய்தனர். கேரளாவை சேர்ந்த சல்மான்கான் 26, தப்பி விட்டார். எஸ்.பி., சிவபிரசாத் அவர்களிடம் விசாரணை நடத்தினார். இதில் தொடர்புடைய மேலும் சிலரை தனிப்படையினர் தேடினர்.
மேலும் மூவர் கைது
தனிப்படை போலீசார் கோவையில் அன்பு 25, ஆனந்த் 23, பெங்களூருவில் யாசர் 23, ஆகியோரை நேற்று கைது செய்தனர். மூவரிடமிருந்தும் ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள 35 கிராம் 'மெத்தபெட்டமைன்' கைப்பற்றப்பட்டது. இவர்களுக்கு மெத்தபெட்டமைன் சப்ளை செய்து, அலைபேசியில் பேசி ஆன்லைன் வழியாக பணம் பரிவர்த்தனை பெற்ற நோகன் என்பவரை கைது செய்ய போலீசார் பெங்களூருவில் முகாமிட்டுள்ளனர்.