ADDED : மே 10, 2024 06:04 AM
பெங்களூரு : வேலைக்கார பெண் கடத்தல் வழக்கில், கர்நாடக ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ரேவண்ணாவின் உறவினர் உட்பட மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ரேவண்ணா, 66, ஹொளேநரசிபுரா தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,வாக இருக்கிறார். இவரது மகன் பிரஜ்வல், 33, மீது ஆபாச வீடியோ வழக்கு பதிவாகியுள்ளது. இவர் தற்போது ஜெர்மனியில் உள்ளார்.
இதற்கிடையில், ரேவண்ணாவின் வீட்டில் மைசூரு கே.ஆர்.நகரைச் சேர்ந்த 40 வயது பெண், சில ஆண்டுகளுக்கு முன் வேலை செய்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் 29ம் தேதி அந்த பெண்ணின் மகன், போலீசாரிடம், எம்.எல்.ஏ., ரேவண்ணா, அவரது உறவினர் சதீஷ்பாபு ஆகியோர், தன் தாயை கடத்தி சென்றதாக புகார்அளித்தார்.
அந்த புகாரின்படி வழக்குப் பதிவு செய்த போலீசார், ரேவண்ணாவை முதல் குற்றவாளியாகவும், சதீஷ்பாபுவை இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்த்தனர்.
பின், சிறப்பு புலனாய்வு குழுவுக்கு வழக்கு மாற்றப்பட்டது. கடந்த 2ம் தேதி சதீஷ்பாபு கைது செய்யப்பட்டார். ரேவண்ணா 4ம் தேதி கைதானார்.
இந்நிலையில், ரேவண்ணாவின் மனைவி பவானியின் உறவினரான சஞ்சய், 40, வக்கீல் திம்மப்பா, 40, மைசூரின் கீர்த்தி ஒசுர், 38, ஆகியோர், சதீஷ்பாபுவுடன் தொடர்பில் இருந்ததும், வேலைக்கார பெண்ணை கடத்த உதவியதும், சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தெரியவந்தது.
நேற்று முன்தினம் நள்ளிரவு கே.ஆர்.நகர் சென்ற போலீசார், அவர்கள் மூன்று பேரையும் கைது செய்தனர். அவர்களை பெங்களூருஅழைத்து வந்து விசாரிக்கின்றனர்.