ADDED : ஏப் 21, 2024 12:29 AM

சென்னை:ஓட்டு எண்ணும் மையங்களில் பூட்டி 'சீல்' வைக்கப்பட்ட அறைக்குள், ஓட்டு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் 39 லோக்சபா தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அன்று இரவே சீலிடப்பட்ட பெட்டிகளில் வைக்கப்பட்டு, ஓட்டு எண்ணும் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டன.
தமிழகம் முழுதும், 39 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடக்கிறது. அந்த மையங்களில், அந்தந்த தொகுதிக்குரிய ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், அறையில் வைத்து பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.
அறைக்கு உள்ளே மற்றும் வெளியே, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அங்கு, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் மற்றும் துணை ராணுவத்தினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல், தமிழக ஆயுதப்படை போலீசாரும் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர். மூன்றாவது அடுக்காக, உள்ளூர் போலீசார் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு வெளியில் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
மேலும், வேட்பாளர்களின் ஏஜென்ட்களும் ஓட்டு எண்ணும் மையத்தில் தங்கி, கண்காணிப்பு பணியை செய்து வருகின்றனர். ஓட்டு எண்ணும் மையம் அமைந்துள்ள வளாகத்துக்குள், அனுமதி பெற்றவர் தவிர, வேறு யாரும் செல்ல முடியாது.

