அவமதிப்பு வழக்கில் ஆஜராக திருப்பத்துார் கலெக்டருக்கு உத்தரவு
அவமதிப்பு வழக்கில் ஆஜராக திருப்பத்துார் கலெக்டருக்கு உத்தரவு
ADDED : ஜூலை 28, 2024 12:37 AM
சென்னை:ஜாதி சான்றிதழ் வழங்காத விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கில், திருப்பத்துார் கலெக்டர் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
திருப்பத்துார் மாவட்டம், நாட்றாம்பள்ளி தாலுகாவைச் சேர்ந்த உமா என்பவர், திருப்பத்துார் கலெக்டராக பதவி வகித்த பாஸ்கரபாண்டியனுக்கு எதிராக தாக்கல் செய்த மனு:
நான் பழங்குடியின பிரிவில் உள்ள குருமன் சமூகத்தைச் சேர்ந்தவள். எனக்கும், மூன்று குழந்தை களுக்கும் ஜாதி சான்றிதழ் வழங்கும்படி, கலெக்டரிடம் விண்ணப்பித்தேன். என் சகோதரர் பெற்றிருந்த ஜாதி சான்றிதழின் நகலையும் சேர்த்து அனுப்பினேன்.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், அவருக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டதால், அதன் நகலையும் அனுப்பினேன்.
என் விண்ணப்பத்தை நிராகரித்து, 2021 அக்டோ பரில் கலெக்டர் உத்தரவிட்டார். நான் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த, 'ஹிந்து குரும்பர்' எனக்கூறி, விண்ணப்பத்தை நிராகரித்துள்ளார். இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தேன்.
மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், கலெக்டரை அணுகலாம் என்று உத்தரவிட்டது. அவ்வாறு அணுகினால், ஆறு மாதங்களுக்குள் மனுவை பைசல் செய்யும்படி கலெக்டருக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, 2022 டிசம்பரில் முறையீடு செய்தேன். அந்த மனுவை, 2023 ஜூன் 22க்குள் பைசல் செய்திருக்க வேண்டும். விசாரணைக்கு ஆஜராகும்படி, 2023 அக்டோபரில் எனக்கு சம்மன் வந்தது.
நான் தாக்கல் செய்த ஆவணங்கள் அடிப்படையில், மனுவை பைசல் செய்யும்படி கோரினேன். புதிய விசாரணைக்கு ஆஜராக விரும்பவில்லை எனவும் தெரிவித்தேன். என் பதிலுக்கு பின்னும், மனுவை பைசல் செய்யவில்லை.
வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை கலெக்டர் மதிக்கவில்லை. எனவே, சட்டப்படி கலெக்டரை தண்டிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி ஆர்.சுப்ரமணியன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஆகஸ்ட் 22ம் தேதி, மாவட்ட கலெக்டர் ஆஜராகி விளக்கம் அளிக்க, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

