'டிரைவிங் லைசென்ஸ்' வாங்க 'டாக்டர் சர்டிபிகேட்' வேணும்!
'டிரைவிங் லைசென்ஸ்' வாங்க 'டாக்டர் சர்டிபிகேட்' வேணும்!
ADDED : ஜூன் 11, 2024 02:08 AM
சென்னை : 'பதிவு பெற்ற டாக்டரிடம் மருத்துவ சான்று பெற்றால் தான், 40 வயதை கடந்தோர், புதிதாக ஓட்டுனர் உரிமம் பெறவோ, பழைய உரிமத்தை புதுப்பிக்கவோ இயலும்' என, போக்குவரத்து துறை கமிஷனர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
மத்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி, 40 வயதுக்கு மேற்பட்டோர், பதிவு பெற்ற டாக்டரிடம் பெற்ற மருத்துவ சான்றிதழை இணைத்தால் தான், புதிதாக ஓட்டுனர் உரிமம் பெற முடியும் அல்லது பழைய உரிமத்தை புதுப்பிக்க முடியும்.
ஆனால், பலர் பதிவு பெறாத போலி டாக்டர்களிடம் மருத்துவ சான்றிதழ் பெற்று, போக்குவரத்து துறையின் இணையதளமான, 'சாரதி'யில் பதிவேற்றி, ஓட்டுனர் உரிமம் பெற முயற்சிக்கின்றனர்.
இது, சட்டப்படி குற்றம். இதை தடுக்கும் வகையிலும், பதிவு பெற்ற டாக்டர்களை அடையாளம் காணும் வகையிலும், இன்று முதல் புதிய நடைமுறை கடைப்பிடிக்கப்பட உள்ளது. அதாவது, டாக்டர்கள், தமிழக மருத்துவ கவுன்சில் வழங்கியுள்ள தங்களின் மருத்துவ சான்றிதழ், ஆதார், மொபைல் போன் எண் உள்ளிட்டவற்றுடன், கிளினிக் விபரங்களையும், 'சாரதி'யில் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்த டாக்டர்கள் மட்டுமே, மருத்துவ சான்றிதழ் வழங்க முடியும்.
டாக்டர்கள் தங்களின் விபரங்களை பதிவு செய்வது குறித்து, இன்று காலை 11:00 மணிக்கு, அனைத்து ஆர்.டி.ஓ., அலுவலகங்களிலும் செயல்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

