நெல்லையை போல் கோவையிலும் 'தொல்லை' தி.மு.க., தலைமை திக்...திக்...
நெல்லையை போல் கோவையிலும் 'தொல்லை' தி.மு.க., தலைமை திக்...திக்...
ADDED : ஆக 05, 2024 09:47 PM
கோவை:கோவை மேயரை தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தல், மாநகராட்சி அலுவலகத்தில் இன்று (ஆக., 6) காலை, 10:30 மணிக்கு நடக்கிறது. நெல்லையில் நடந்ததைபோல், போட்டியாக யாரேனும் வேட்பு மனு தாக்கல் செய்து விடுவார்களோ என்கிற பதைப்பதைப்பு, கட்சி நிர்வாகிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால், தலைமை நிலைய செயலர் அன்பகம் கலை மற்றும் அமைச்சர் நேரு ஆகியோர், கோவை வருவதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
கோவை மாநகராட்சி மேயர் பதவியை, தி.மு.க.,வை சேர்ந்த முதல் பெண் மேயரான, 19வது வார்டு கவுன்சிலர் கல்பனா, சமீபத்தில் ராஜினாமா செய்தார். அடுத்த மேயர் தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல், மாநகராட்சி பிரதான அலுவலக விக்டோரியா ஹாலில் இன்று (ஆக., 6) காலை, 10:30 மணிக்கு நடக்கிறது.
மேயர் வேட்பாளராக, 29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி அறிவிக்கப்பட்டார். இது, தி.மு.க., சீனியர் கவுன்சிலர்கள் மத்தியில், அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேயர் பதவியை கைப்பற்ற, மண்டல தலைவர்கள் மீனா, லக்குமி இளஞ்செல்வி, நிலைக்குழு தலைவர்கள் சாந்தி, மாலதி மற்றும் கவுன்சிலர்கள் அம்பிகா, ரங்கநாயகி ஆகியோர் முயற்சித்தனர். இதில், 29வது வட்ட செயலாளர் ராமச்சந்திரன் மனைவி ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டார். இதை அறிவித்து விட்டு, அமைச்சர் நேரு, திருச்சிக்கு புறப்பட்டுச் சென்றார்.
மேயர் பதவி கிடைக்காத ஏமாற்றத்தில், மண்டல தலைவர் மீனா, காரில் திரும்பிச் சென்றபோது, மனவேதனையில் கதறி அழுதார். இது, கட்சி தலைமைக்கு நெருடலை ஏற்படுத்தியது. அவரை, மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக், பொறுப்பு அமைச்சர் முத்துசாமி ஆகியோர் சமாதானம் செய்தனர்.
இச்சூழலில், நெல்லை மாநகராட்சியில் கட்சி தலைமை அறிவித்த வேட்பாளருக்கு போட்டியாக, கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதனால், மறைமுகத் தேர்தல் நடத்தி, மேயர் தேர்வு செய்யப்பட்டார்.
நெல்லையில் மொத்தம், 55 கவுன்சிலர்கள்; அதில், ஒருவர் அ.தி.மு.க., கவுன்சிலர்; இவர் தேர்தலை புறக்கணித்தார். மீதமுள்ள, 54 கவுன்சிலர்கள் ஓட்டளித்தனர். ஒரு ஓட்டு செல்லாததாகியது. செல்லத்தக்க, 53 ஓட்டுகளில், தி.மு.க., தலைமை அறிவித்த வேட்பாளருக்கு ஆதரவாக, 30 பேரே ஓட்டு அளித்தனர்.
மீதமுள்ளவர்கள் போட்டி வேட்பாளருக்கு ஓட்டளித்ததால், கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். இதுவும் கட்சி தலைமைக்கு நெருடலை ஏற்படுத்தியது.
இவ்விரண்டு பிரச்னைகளும், முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. நெல்லையில் நடந்ததைபோல், கோவையிலும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, மேயர் தேர்தலை நேரில் இருந்து முடித்து வைக்க, அமைச்சர் நேருவுக்கு கட்சி தலைமை உத்தரவிட்டது. நேற்று கிளம்பிச்சென்ற அவர், மீண்டும் கோவை வருவதாக, கட்சியினர் தெரிவித்தனர்.
இச்சூழலில், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும், அமைச்சர் உதயநிதிக்கும் கட்சி நிலவரங்களை நேரடியாக எடுத்துச் செல்லும், தலைமை நிலையச் செயலாளர் அன்பகம் கலையை, கோவைக்கு நேரில் சென்று, மேயர் தேர்தல் தொடர்பான பிரச்னைகளை முடித்து வைக்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதனால், அவரும் கோவை வருவதாக, கட்சியினர் மத்தியில் தகவல் பரவியுள்ளது.
அனைத்து தி.மு.க., கவுன்சிலர்களும், இன்று காலை, 9:00 மணிக்கு கோட்டைமேட்டில் உள்ள நல்லாயன் கல்யாண மண்டபத்துக்கு வர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இங்கு கவுன்சிலர்களை சமாதானப்படுத்தும் கூட்டம் நடக்கிறது.
அதன்பின், கோவை மாநகராட்சி அலுவலகத்துக்கு அனைவரும் அழைத்துச் செல்லப்பட இருக்கின்றனர். இதன் காரணமாக, கோவை மேயர் தேர்தலில் பரபரப்பு மீண்டும் தொற்றியிருக்கிறது.