ADDED : ஏப் 18, 2024 12:18 AM

சென்னை:விமானத்தில் கடத்தி வரப்பட்ட, 493 அரிய வகை ஆமைகள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தலில் ஈடுபட்ட ஏட்டு உட்பட, இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து, 'ஏர் ஏசியா' விமானம், 12ம் தேதி நள்ளிரவு சென்னை வந்தது. பட்டுக்கோட்டையை சேர்ந்த முகமது மூபின், 28, சுற்றுலா பயணி விசாவில் தாய்லாந்துக்கு சென்று, இந்த விமானத்தில் திரும்பி வந்தார். சுங்கப் பிரிவு அதிகாரிகள் அவரிடம் விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.
அவர் வைத்திருந்த ஒரு பெரிய கூடையை பிரித்துப் பார்த்தபோது, சிவப்பு காதுகளுடைய அரிய வகை ஆமைகள் மற்றும் ஆப்ரிக்க அரிய வகை ஆமைகள், 493 எண்ணிக்கையில் இருந்தன. மூபினை, அதிகாரிகள் கைது செய்தனர்.
ஆமைகளை, மதுரையில் உள்ள ஆயுதப்படை ஏட்டு ரவிகுமார் என்பவருக்காக கடத்தி வருவதாக, மூபின் கூறினார். சுங்கப் பிரிவினர், ஏட்டு ரவிகுமாரை கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனர். இவர் ஏற்கனவே, நட்சத்திர ஆமைகள் கடத்தல் வழக்கில் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறைக்கு சென்று வந்தவர் என தெரிய வந்துள்ளது. இந்த அரிய வகை ஆமைகள் மருந்து தயாரிப்பு மற்றும் பெரிய பங்களாக்களில் தொட்டிகளில் அலங்கார உயிரினமாக வளர்க்கப் பயன்படுத்தப்படுகின்றன.

