ADDED : ஏப் 08, 2024 06:21 AM

சென்னை : ''கோவில் திருவிழாக்களில், நவீன வளர்ச்சியை வைத்து பாரம்பரியத்தை சிதைக்கக்கூடாது,'' என, மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசினார்.
'கலைமகள்' இதழ் மற்றும் கி.வா.ஜ., குடும்பத்தினர் சார்பில், 'வாகீச கலாநிதி கி.வா.ஜ., சிறுகதைப் போட்டி - 2024'க்கான பரிசளிப்பு விழா, சென்னையில் நேற்று நடந்தது.
சிறுகதை போட்டி
இதில், மலேஷியாவைச் சேர்ந்த கரு.பன்னீர்செல்வம், திருச்சியைச் சேர்ந்த பாளை இசக்கி, சென்னையைச் சேர்ந்த கே.ஜி.ஜவகர் ஆகியோருக்கு, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பரிசுகளை வழங்கினார்.
கி.வா.ஜ., பரிசுகள் குறித்து, 'கலைமகள்' இதழாசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் பேசியதாவது:
கலைமகளின் முன்னாள் ஆசிரியர் கி.வா.ஜகநாதன் பெரிய எழுத்தாளர்களை மட்டுமே கொண்டாடாமல், துணுக்கு எழுதுபவர்களையும் அடையாளப்படுத்தி, விழா எடுத்தவர். அவரை நினைவுகூரும் வகையில், அவரது பெயரில் சிறுகதை போட்டியை நடத்துகிறோம்.
இந்த போட்டிக்கு, 174 சிறுகதைகள் வந்தன. அவற்றை அப்படியே நடுவர் குழுவிடம் தந்து, பிரபலமானவர் என்பதால், எவர் கதையையும் தேர்வு செய்யவோ, நல்ல கதையை பிரபலமானவர் என்பதற்காக நிராகரிக்கவோ கூடாது. அவநம்பிக்கையை விதைக்கும், தேசத்தை அவமதிக்கும் கதைகளை நிராகரிக்க வேண்டும் என்றேன். குழு மூவரை தேர்வு செய்தது. இவ்வாறு அவர் பேசினார்.
பரிசுகளை வழங்கி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசியதாவது:
நல்ல சிறுகதைக்கான இலக்கணமாக கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியனும், தேர்வான கதைகளின் தரம் குறித்து, சாஸ்த்ரா பல்கலையின் முன்னாள் டீன் ரகுநாதனும் பேசியது, நீதிபதி பணிக்கே பொருந்துவதாக இருந்தது. என்னிடம் பல விசித்திரமான வழக்குகளும், வில்லங்கமான வழக்குகளும் வரும்.
மதுரை சித்திரை திருவிழாவில், அழகர் ஆற்றில் இறங்கும் போது தண்ணீர் பீய்ச்சி அடிப்பது குறித்த வழக்கு சமீபத்தில் வந்தது. அதில், சீன மோட்டார் பம்புகள் வாயிலாக அதிவேகமாக தண்ணீர் பீய்ச்சி அடிப்பது குறித்து ஆட்சேபம் தெரிவித்திருந்தனர்.
இது குறித்து, மானிடவியல், பண்பாட்டு எழுத்தாளர் தொ.பரமசிவம் எழுதிய, 'அழகர்கோவில்' என்ற ஆய்வு நுாலை படித்தபோது, தண்ணீர் தெளிப்பது குறித்த வழக்கம் விரிவாக எழுதப்பட்டிருந்தது. அதை முன்னுதாரணமாக காட்டி என் தீர்ப்பை வழங்கினேன்.
நவீன வளர்ச்சி
வீட்டுக்கு வந்து, 'கலைமகள்' இதழை திறந்தேன். 'கிள்ளை விடுதுாது' குறித்து எழுதப்பட்டிருந்தது. அதை என் தீர்ப்பிலும் எழுதி இருந்தேன்.
அதாவது, எந்த ஒரு பாரம்பரிய திருவிழாவிலும், நவீன வளர்ச்சியால் பாரம்பரிய முறைகளை சிதைக்கக்கூடாது. அவ்வாறு சிதைத்தால், அது பாரம்பரிய திருவிழாவாக இருக்காது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சிக்கு முன், யு.இ.சிந்துஜா, 'ராம ஜனனம்' என்ற இசை சொற்பொழிவை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில், நாவல் எழுத்தாளர் தேவிபாலா, பரிசாளர்களை பாராட்டினார்.
கி.வா.ஜ.,வின் மகன் குமார் முன்னிலையில், பரிசாளர்களை கலைமகள் பதிப்பாளர் பி.டி.டி.ராஜன் கவுரவிக்க, சி.வி.சந்திரமோகன் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.

