UPDATED : மார் 22, 2024 12:37 PM
ADDED : மார் 22, 2024 12:37 AM

சென்னை:சிலை திருட்டு மற்றும் கடத்தல் தொடர்பாக, மூன்று வழக்குகளில், 11 பேரை போலீசார் கைது செய்தனர்; ஆறு சிலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
	மதுரை மாவட்டம் விளாங்குடி செம்பருத்தி நகரில், பிலோமின்ராஜ் என்பவரின் வீட்டில், உலோக சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அந்த வீட்டில் சோதனை நடத்தி, விளாங்குடி விசாலாட்சி வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் திருடப்பட்ட பழமையான விநாயகர் சிலையை மீட்டனர். இது தொடர்பான வழக்கில், பிலோமின்ராஜ் உட்பட நான்கு பேரை கைது செய்தனர்
	சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், புதுக்கோட்டை ஆலந்துார் சிக்னலில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட பழமையான அம்மன் உலோக சிலையை மீட்டனர். இது தொடர்பாக, காரைக்குடியைச் சேர்ந்த அஜித், விருதுநகர் அகமது உட்பட மூன்று பேரை கைது செய்துள்ளனர்
	ரகசிய தகவலின்படி, விழுப்புரம் மாவட்டம் புலிச்சப்பள்ளம் என்ற இடத்தில் உள்ள செல்வகுமார் என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த மூன்று பெருமாள், ஒரு அனுமன் உலோக சிலைகள் மற்றும் திருவாச்சியை கைப்பற்றினர். கோவிலில் திருடப்பட்ட சிலைகளை பதுக்கிய அதே பகுதியைச் சேர்ந்த பாரதிதாசன் உட்பட நான்கு பேரை கைது செய்தனர்.
மூன்று நாட்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 11 பேர் கைது செய்யப்பட்டு, பழமையான ஆறு உலோக சிலைகள் மற்றும் திருவாச்சியை பறிமுதல் செய்துள்ளனர்.

