ADDED : ஆக 16, 2024 01:16 AM

சென்னை:''அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடக்கும், 95 ரயில் நிலையங்களின் மேம்பாட்டு பணி, அடுத்த ஆண்டு மார்ச்சில் முடிவடையும்,'' என, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.
சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே மைதானத்தில், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங், தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது:
தெற்கு ரயில்வேயில், 2023 - -24ம் நிதியாண்டில் மொத்த வருவாய், 12,117 கோடி ரூபாய். இது, முந்தைய ஆண்டை விட, 10.3 சதவீதம் அதிகம்.
பயணியர் வசதி
நடப்பாண்டில் ஜூலை வரை, 4,108 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, 6 சதவீதம் உயர்வு.
சரக்குகள் கையாளுதலை பொறுத்தவரை, கடந்த நிதியாண்டில், 4.1 கோடி டன் சரக்குகள் ஏற்றப்பட்டுள்ளன.
இது, அதற்கு முந்தைய ஆண்டைவிட 9 சதவீதம் அதிகம். தெற்கு ரயில்வேயில் கடந்த நிதியாண்டில், 70.8 கோடி பேர் பயணம் செய்துஉள்ளனர்.
இது, அதற்கு முந்தைய ஆண்டை விட 11 சதவீதம் அதிகம். பயணியர் வசதிக்காக, கடந்த நிதியாண்டில் 1,200 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
தெற்கு ரயில்வேயில், 2023 - -24-ம் ஆண்டில், 1,577 கி.மீ., பாதையில் மணிக்கு, 110 முதல் 130 கி.மீ., ஆக ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டது. குறிப்பிட்ட சில பாதைகளில் வேகம், 90 முதல் 110 கி.மீ., ஆக உயர்த்தப்பட்டது. ஜோலார்பேட்டை -- கோவை வழித்தடத்தில் ரயில்களின் வேகம், 130 கி.மீ., ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 95 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன.
இந்தப் பணிகள் அடுத்த மார்ச்சுக்குள் முடிக்கப்படும். இதுதவிர, 21 நிலையங்கள் மறு மேம்பாடு செய்யப்பட உள்ளன. இந்த பணிகளும், 2 முதல் 3 ஆண்டுகளில் முடிக்கப்படும்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய பாம்பன் பாலத்தின் பணிகள் முடிந்துள்ளன. மண்டபம் -- ராமேஸ்வரம் இடையே மீண்டும் ரயில் சேவையை அக்டோபரில் துவங்க திட்டமிட்டுள்ளோம்.
பறிமுதல்
பயணியர் பாதுகாப்பு மற்றும் ரயில்வே சொத்து களை பாதுகாப்பதில், ரயில்வே பாதுகாப்பு படை சிறப்பாக பணியாற்றி வருகிறது. இவர்களால், 170 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன; 303 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோல, அயனாவரம் மைதானத்தில் நடந்த விழாவில், சென்னை ரயில் கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா, தேசிய கொடியை ஏற்றி வைத்து, சென்னை ரயில் கோட்டத்தில் நடக்கும் மேம்பாட்டு பணி குறித்து பேசினார்.

